
கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் துரைதயாநிதி தயாரிக்கும் படம் தூங்காநகரம். இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரையலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. தூங்காநகரத்திற்கு இசையமைத்து தன்னுடைய தொடர் வெற்றியை உறுதி செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு. தாமரை,அண்ணாமலை,ஞானக்கரவேல் ஆகியோர் எழுதிய பாடல்களையும் படத்தின் பின்னணி இசையினையும் செக் குடியரசில் உள்ள பிராக் என்னும் நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஒலிப்பதிவுக்கூடத்தில் உலகப்புகழ்பெற்ற சிம்ஃபொனி இசைக்கலைஞர்களைக் கொண்டு பதிவு செய்திருக்கிறார்கள். இசைக்கான ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படங்களில் பணிபுரிந்த இசையினை கண்டக்ட் செய்யும் ”யான்” Yan என்பவரே தூங்கா நகரத்திற்கான இசைப்பதிவிலும் பணியாற்றியிருக்கிறார்.
முக்கிய கதா நாயகனாக விமலும் அவருடன் கெளரவ்,பரணி,நிஷாந்த் போன்றோரும் நடிக்க கதாநாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார். மதுமிதாவும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். கே.வி.ஆன்ந்தின் உதவியாளர் கே.விஜய் உலகநாத் முதன் முதலாக தமிழில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் பெயருக்கு ஏற்ப மதுரையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் குறிப்பாக வைகை அணை போன்ற பகுதிகளில் காட்சிகளையும் பாடல்களையும் மிகவும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
பாடல்களை லிங்குசாமி வெளியிட கெளதம் வாசுதேவ மேனன் பெற்றுக் கொண்டார்.
இயக்குனர் கெளரவின் குரு நாதர் கே.எஸ்.ரவிக்குமார் உட்பட இயக்குனர்கள் அமீர்,கெளதம் வாசுதேவ மேனன், லிங்குசாமி,ச்சிகுமார்,சமுத்திரக்கனி,கே.வி.ஆன்ந்த், வினியோகஸ்தர் அருள்பதி, கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் வாழ்த்திப்பேசினார்கள். மதுரைக்காரர்கள் நிறைந்து காணப்பட்ட விழா மேடையில் மதுரை மண்ணின் வாசம் மிக அதிகமாகவே வீசியது. குறிப்பாக தூங்கா நகரத்தின் இயக்குனர் கெளரவ் வரவேற்புரை ஆற்றியபோதும் தயாரிப்பாளர் துரை தயாநிதி நன்றியுரை ஆற்றிய போதும். கே.எஸ்.ரவிக்குமாரைப்பற்றி துரைதயாநிதி பேசும் போது ”தமிழ்ப்பட நேரத்திலேயே சும்மா கதையக்கொடுத்துக்கிட்டே இருப்பாரு ஆனா அவருதான் வருஷம் ஏற ஏற இளமையாகிட்டேயிருக்காரு” மேலும் ”வந்தாப்ல , சொன்னாப்ல , பாத்துக்கிட்டாப்ல” என்று பேசிய போதும் மதுரை வாசம் கொஞ்சம் தூக்கலாகவே அடித்த்து.
கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளரான இளம் இயக்குனர் கெளரவ், ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத் எட்டிட்டர் சுரேஷ் மற்றும் 70 புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தன்னுடைய முதல் நேரடித் தயாரிப்பாக தூங்காநகரத்தைத் தயாரித்து இருக்கிறார் துரைதயாநிதி. சிவாஜியுடன் நட்புபாராட்டிக்கொண்டிருந்த வேளையிலேயே நடிக்க அழைத்தும் போகாதா சிதம்பரம் இந்தப்பட்த்தின் கதையினைக்கேட்ட உடனேயே முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். சண்டைப்பயிற்சி திலீப் சுப்புரயன், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணியாற்றிய பிரபல கலை இயக்குனர் டி.சந்தாணம் இந்தப்படத்திலும் அந்தப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார். நிர்வாகத்தயாரிப்பு சுஷாந்த் பிரசாத், மக்கள்தொடர்பு ஜான்ஸன்.
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது “துரை, முதல்வருக்குப் பேரனாகவோ, மத்திய அமைச்சரின் மகனாகவோ இல்லாமல் ஒரு சாதராண மனிதராக இருந்தாலும் கூட மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறையில் நிச்சயம் பெரிய சாதனைகள் புரிந்திருப்பார் அந்த அளவுக்கு துரைக்கு சினிமாவைப்பற்றிய காதலும் கனவுகளும் திறமைகளும் இருக்கின்றன” என்று குறிப்பிட்டார். தூங்கா நகரத்தின் பாடல்களையும் டிரையலரையும் பார்க்கும் போது அது மிகவும் உண்மை என்று துரைதயாநிதி நிரூபித்திருக்கிறார்.
இயக்குனர் அமீர் பேசும்போது மனிதர்கள் வாய்க்கால் வரப்பிற்காக/பணத்திற்காக/பெண்ணிற்காக ஆயுதங்களை எடுக்கும் போது மதுரையில் மட்டும் தான் நட்புக்காக ஆயுதம் எடுப்பார்கள் என்று குறிப்பிட்டார். அதனை மெய்ப்பிப்பதைப்போல நட்புக்காக தனது கிளவுட் நைன் தயாரிப்பு நிறுவன ஆயுதத்தை எடுத்துப் பல திறமைசாலி நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்க வரிந்து கட்டிக்கொண்டு தயாராகிவிட்டார் துரைதயாநிதி.
-K.விஜய் ஆனந்த்