
சூர்யா, கார்த்தி இருவரையும் வைத்து தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவின் அடுத்த பிரமாண்டமான படைப்பு சிறுத்தை. முதல்முறையாக கார்த்தி இரட்டை வேட்த்தில் நடிக்கும் படம். ராக்கெட் ராஜா என்கிற பிக்பாக்கெட் திருடனாகவும் ரத்தினவேல் பாண்டியன் என்கிற DSP யாகவும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு கதாபாத்திரங்களில் கார்த்தி தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தெலுங்கில் தனது இயக்குனர் பயணத்தை ஆரம்பித்த தமிழரான இயக்குனர் சிவா இந்தப் பட்த்தை இயக்கியிருக்கிறார். சந்தானம் வழக்கம்போல காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அழகான மக்குப் பெண்ணாக தமன்னாவும் நடித்திருக்கிறார். கதையின் முக்கியக் கதாபாத்திரமாக 3 வயது குழந்தை அக்ஷயா நடித்திருக்கிறாள். காட்சிகளை மிகவும் நம்பும் படியாகவும் யதார்த்தம் குறையாமலும் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஏற்கனவே வித்யாசாகரின் இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுவிட்டன.
பொங்கலுக்குத் திரையில் சீறிப்பாய இருக்கின்ற சிறுத்தைக்கு மற்றுமொரு சிறப்பாக அதன் விளம்பர செயல்பாடுகளில் ஏர்டெல் நிறுவனமும் கைகோர்த்துள்ளது. கார்த்தி ஏர்டெல்லின் பிராண்டு அம்பாஸடர் ஆக விளங்குவது தெரிந்ததே. ஸ்டுடியோ கிரீனுடன் ஏர்டெல் நிறுவனமும் இணைந்து சிறுத்தையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கிறார்கள். இதற்கான முறையான அறிவிப்பினை தமிழ் நாடு கேரளா பகுதிக்கான ஏர்டெல் தலைமை செயல் இயக்குனர் ராஜீவ் ராஜகோபால் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இன்று வெளியிட்டனர். விளம்பரம் செய்வதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் சிறுத்தைத் திரைப்படத் தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் சிறுத்தை தொடர்பான போஸ்டர்கள், ரிங்டோன்கள் போன்றவற்றை பதவிறக்கம் செய்து கொள்ளவும் 54321777 என்கிற எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த எண்ணுக்கு அழைத்துப்பேச நிமிட்த்திற்கு ரூ 2 மட்டும் நிர்ணயத்துள்ளனர். ”மீட் & கிரேட் கார்த்தி” என்ற நிகழ்ச்சிக்காக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் ரசிகர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் கார்த்தியுடன் சந்தித்துப் பேசவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த சந்திப்பு சென்னை,கோவை மற்றும் மதுரையில் நடைபெறும்.
பருத்தி வீரனில் தொடங்கிய கார்த்தியின் திரைப்பயணம் ஐந்தே படங்களில் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றிருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் காணப்படும் கார்த்தி, பத்திரிக்கையாளர் மற்றும் ரசிகர்களின் விமர்சனங்களை பாராட்டோ அல்லது தவறினைச் சுட்டிக்காட்டுதலோ இரண்டையுமே சமமாக எடுத்துக் கொண்டு தன் குறைகளைப் படத்திற்குப்படம் சரிசெய்ய முயற்சிப்பதாகக் கூறினார்.