இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளி வந்த சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும்... வெலங்க மீனுக்கும் பாடலில் கானா உலக நாதனுக்கு ஒரு சிலை மாதிரி மைக்கைப் பிடித்தவாறு வரும் இளம் நடிகர் முத்துராஜா இன்று காலை மருத்துவமனையில் மரணமடைந்தார். அந்த ஒரே காட்சியில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான இடத்தைப்பெற்றவர் முத்துராஜா.
தனது வீட்டில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கீழே தவறி விழுந்த முத்துராஜாவிற்கு தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முற்றிலும் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்துராஜா, இன்று காலை நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
குறுகிய கலத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்தாலும் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லுமளவுக்கு படம் முழுவதும் வந்து தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் முத்துராஜா. இவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரில் நடக்கிறது. பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்துராஜாவிற்கு கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.