பனையேறிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் நெடுமி பட விழாவில் பேசிய இயக்கு நர் பேரரசு, டாஸ்மாக் சரக்கை விட கள் உடம்புக்கு நல்லது, கள்ளை டாஸ்மாக்கில் விற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு பேசும்போது,"நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன். பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்! இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்…” என்றவர் பாரபட்சமாக கேள்விகேட்கும் சமூக அரசியல் பத்திரிகையாளர்களை ஒரு பிடி பிடித்தார். ”பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள் ;ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள்.இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை? மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்; ஆனால் கேலி பேசக்கூடாது.அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை.இங்கே வந்து அரசியல் பேசக்கூடாது.படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி வாழ்த்த வேண்டும் .அதை விட்டுவிட்டு திசை மாற்றி ,படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது. ..” என்று முக்தர் அகமதுக்கு ஒரு செக் வைத்தார்.