பனையேறிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான நெடுமி பட விழாவில் பேசிய பயில்வான் ரங்க நாதன், நான் ஒரு பனையேறிதான் என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், " இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள் சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன். 'காவல் தெய்வம் 'படத்தில் சிவாஜி கணேசன்ஒரு பனையேறியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை எஸ்.வி. சுப்பையா தயாரித்திருப்பார். நடிகர் திலகம் அந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார். காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார். இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும். பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள். எவரும் கஷ்டப்படவில்லை .இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான். அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ்.அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர் .எவரும் வறுமையில் வாழவில்லை.இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள்.பனையேறிகள் ஏன் சிரமப்பட வேண்டும்? ஒரு காலத்தில் நாலணாவிற்கு கருப்பட்டி விற்றது.அப்போது வெள்ளை சர்க்கரை எட்டணா விற்றது. இப்போது கருப்பட்டி 400 ரூபாய் விற்கிறது. அதே வெள்ளை சர்க்கரை 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்புள்ளதாக கருப்பட்டி இருக்கிறது .அதனால் தான் சொல்கிறேன் பனையேறிகள் என்றும் சிரமப்பட்டதில்லை. பனையேறிகளிடம் ஒரு முறை உண்டு .அதற்குப் பாட்டம் என்று பெயர்.ஒரு நாள் வரும் கள்ளைப் பனையேறி எடுத்துக் கொள்வார். மறுநாள் மரத்துக்காரருக்குக் கொடுப்பார். இப்படி முறை வைத்து சம்பாதிப்பார்கள். நாங்கள் கள்ளை ஆதரித்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் என்பது இயற்கை கொடுத்த பால் .ஒரு மரத்துக் கள்ளை குடிப்பவன் நூறாண்டு வாழ்வான். பனையேறிகள் எப்போதும் உடல் வலிமையோடு இருப்பார்கள். படங்களில் பனையேறிகளை உயர்த்திக்காட்டுங்கள். ஊடகங்கள் எப்போதும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். இந்த படம் உண்மையில் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நிச்சயமாகக் தூக்கி பிடிப்பார்கள். லவ் டுடே படம் யாரால் ஓடியது ?முழுக்க முழுக்க ஊடகங்கள் தான் காரணம்.
நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான். அதேபோல் மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் தான். காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். காதல் இளவரசன் என்றால் அது கமல்ஹாசன் தான். அதேபோல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒரு வர்தான்.அவருக்கு மட்டுமே அந்த பட்டம் சேரும்.
இப்போது யார் சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள். ஒரு பட்டம் ஒருவருக்குத் தான்.அதை எடுத்து ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்?
இதுவரை கதையைத் திருடினீர்கள்.இப்பொழுது பட்டத்தையும் திருடுவீர்களா? "என்றார்.