தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், மிகப்பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்த இளம் நடிகர் என்கிற பட்டத்திற்கும் சொந்தக்காரர் பிரஷாந்த். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக சமீபத்தில் நடந்த திரைப்படத்துறை குறித்தான கருத்தரங்கில், VFX பற்றி இவர் ஆற்றிய உரை, பலரையும் வியப்பில் அழ்த்தியது என்றால் அது மிகையல்ல. கமல்ஹாசனுக்கு அடுத்து, திரைப்படத்துறையின் நவீன வளர்ச்சிக்கு தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும் இளம் நடிகர்களுள் சந்தேகமே இல்லாமல் முதலிடம் பிரஷாந்திற்கு தான்.
கிட்டத்தட்ட, மறுபடியும் முழு வீச்சில் முன்னணி நடிகர்களுடனான பந்தயத்திற்கு தயாராகும் வகையில், இவர் நாயகனாக நடித்திருக்கும் அந்தகன் ஜுலை 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தியில் வெளியாகி பெரிய வெற்றிபெற்ற இப்படத்தின் தமிழ் உரிமையை பயங்கர போட்டிகளுக்கிடையில் தனது மகனுக்காக கைப்பற்றியிருக்கிறார் தியாகராஜன். அதுமட்டுமல்லாமல், அவரே இயக்கியும் இருக்கிறார்.
இப்படம் குறித்து பேசிய தியாகராஜன், “ அந்தகன் பட நாயகன் ஒரு பியோனா கலைஞன். நிஜத்தில், பிரஷாந்த் மிகவும் சிறப்பாக பியோனா வாசிப்பார். ஆகவே இந்தப்படத்தில் பிரஷாந்த் நடித்தால் கதாபாத்திரத்திற்கு முழுமையாக உயிர் கொடுப்பார் என்று முடிவெடுத்து தான் மிகப்பெரிய தொகை கொடுத்து அந்தகனின் தமிழ் உரிமையை வாங்கி, மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்தும் இருக்கிறோம்.
கொரானா காலகட்டத்தில் கிடைத்த இடைவெளியில் தகுந்த பாதுகாப்புகளோடு அந்தகன் படத்தை இயக்கியிருக்கிறேன். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் பிரஷாந்த் பியோனா வாசிக்க, அங்கிருந்த நடன இயக்குநர் கலா உட்பட அனைவரும் மெய்மறந்து அவர் இசையை ரசிக்க ஆரம்பித்துவிட்டோம். அன்று கிடைத்த கைதட்டல்களை படம் வெளியாகி கிடைக்கப்போகும் வெற்றிக்கு அச்சாரமாய் நான் நினைக்கின்றேன்…” என்றார்.
பிரஷாந்துடன் கார்த்திக், சிமரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, லீலா தாம்ஸன், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி, கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா, பெசண்ட் நகர் ரவி, மோகன் வைத்யா, ஜெயம் எஸ் கே கோபி, செம்மலர் ஆகியோர் நடித்திருக்கும் அந்தகன் படத்தை தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலமாக ஜூலை 1 இல் உலகமுழுவதும் வெளியிடுகிறார்.