மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”. ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் கடந்த 40 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு பைனான்ஸ் தரும் ஜெயின் ராஜ் ஜெயினின் குடும்ப வாரிசு கிஷன் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். அறிமுக இயக்குநராக விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகும் அஷ்டகர்மா படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. எல் வி முத்து & கணேஷ் இசையில் உருவாகியுள்ள அஷ்டகர்மா படத்தில் அஷ்டவதானி டி ஆர் ஒரு பாடலை எழுதி பாடியும் இருக்கிறார்.
இயக்குநர் விஜய் தமிழ்செல்வன் பேசியபோது, “நான் மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். கொரோனா உச்ச கட்டமாக சீனாவில் இருந்த காலத்தில் இந்தபடத்தை ஆரம்பித்தோம். இங்கு வராது என்று நினைத்தோம், கொரோனா வந்ததால் படம் லேட்டாகிவிட்டது. கிஷன் மிகச் சிறந்த திறமைசாலி அவருக்கு கேமரா பயமே இல்லை. மிக அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் இருந்தது, எல்லோருக்கும் டி ஆர் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம் ஆனால் அவரே எழுதி பாடி விட்டார். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் இது..” என்றார்.
தயாரிப்பாளரர்கள் H முரளி, டி.சிவா, கே.ராஜன் , சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு, “இது எங்களது குடும்ப விழா. பைனான்சியர் இல்லையென்றால் தயாரிப்பாளர்கள் உருவாவது கடினம். தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் சினிமாவே இருக்காது. மிகவும் கறாராக நடந்துகொள்ளாமல், சூழ் நிலைகேற்ப விட்டுக்கொடுத்து பல தயாரிப்பாளர்களை காப்பாற்றி படங்கள் வெளியாவதற்கு உதவியிருக்கிறார்கள் ஜெயின் சகோதரர்கள். அவர்கள் வீட்டுப்பையன் நடிக்கும் படத்திற்கு உதவுவது எங்கள் கடமை, படம் நிச்சயம் வெற்றிபெறும்..” என்றனர்.
எஸ் ஜே சூர்யா பேசும் போது, “‘அஷ்டகர்மா’ , விஜய் நல்ல கதை செய்து அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள். கிஷன் செல்வாக்கு மிகுந்தவர், அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தன் லட்சியம் ஒன்றை நோக்கி ஆசைப்பட்டு பயணித்துள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துள்ளார். சினிமா ஏழை பணக்காரன் என்று பார்க்காமல் திறமையை மட்டுமே பார்க்கும். பஸ் கண்டக்டரை சூப்பர் ஸ்டாராக மாற்றும். அந்த வகையில் உண்மையாக உழைக்கும் கிஷன் மிகப்பெரிய நடிகராக வருவார்.” என்று வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், “டி ஆர் அவர்களை வைத்து ஒரு படம் எடுத்துள்ளேன், இப்போது எங்கள் குடும்ப படத்தில் பாடி தந்துள்ளார்.. இங்கு வந்திருக்கும் அனைவரிடமும் 40 வருடமாக பழகி வருகிறோம். அஷ்டகர்மா படம் நன்றாக வந்துள்ளது. கிஷன் எங்கள் குடும்ப பெயரை காப்பாற்றி மிகப்பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும்..” என்றார்.
இயக்குநர் கல்யான் பேசும் போது, “ இந்த குடும்பம் நிறைய சமூக சேவையும் செய்துள்ளது. நிறைய படங்கள் ஜெயிக்க இவர்கள் தான் காரணம் என் படம் உட்பட, அந்த குடும்பத்தில் இருந்து வந்துள்ள கிஷன் ஜெயிக்க வேண்டும்..” என்றார்.
நடிகர், தயாரிப்பாளர் கிஷன் பேசும் போது, “நடிப்பு எனது சிறு வயது கனவு. அப்பா படம் எடுக்கும்போது அர்ஜீன் சார் என்னை படத்தில் நடிக்கிறியா எனக் கேட்டார், நான் தலையாட்டினேன் அவரால் தான் அன்று மனதில் நான் நடிகனாக வேண்டும் என பதிந்து விட்டது. பைனான்சியர் குடும்பம் என்பதற்காக நேரடியாக நடிக்க வந்துவிடவில்லை. அல்லு அர்ஜுன் படித்த நடிப்பு பள்ளியில் படித்து விட்டுத்தான் நடிகனாக முயற்சி செய்தேன். முதலில் கல்யாணம் செய்துகொள் என்றார்கள், சரி நமது பெற்றோர் சொல்வதை முதலில் கேட்டால், சரியான நேரத்தில் நமக்கு வேண்டியதை அவர்கள் செய்வார்கள் என்று ஒத்துக்கொண்டேன். இன்று என் கனவை நனவாக்கிவிட்டார்கள்.
விஜய்யிடம் அஷ்டகர்மா கதை கேட்டேன், எனக்கு பிடித்தது. அவரும் புதுசு நானும் புதுசு இது செட்டாகுமா என தயக்கம் இருந்தது பைலட் பிலிம் எடுத்து பார்த்தேன். நன்றாக இருந்தது. அப்பா அநாவசிய செலவு செய்யாதே, தேவைகான செலவு செய் அப்போ தான் ஜெயிக்க முடியும் என்றார், அது என் மனதில் இருந்தது. ஒரு நல்ல டீம் கிடைத்தது நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நன்றாக நடித்திருக்கிறார்கள். அப்பாவோட ஆசிர்வாதம் எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன். ..” என்றார்.
இயக்குநர் டி ஆர் ராஜேந்தர், “ என்னை எழுத வைத்தீர்கள் எழுதினேன், என்னை பாட வைத்தீர்கள் பாடினேன். என் வாழ்வில் வசந்தத்தை தந்தவர் ஜெயின், அந்த குடும்பத்திற்காக தான் நான் பணியாற்றினேன். ஒரு வசந்த கீதம் படத்தில் சிலம்பரசனை நடிக்க வைத்தது இந்த குடும்பம் தான். அவர்கள் குடும்பத்து பையன் கிஷன் பெரிய வெற்றி பெற வேண்டும்...” என்றார்.