விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் “எஃப் ஐ ஆர் (FIR)” படத்தின் டிரையலர் வெளியீடு மிகவும் பிரமாண்டமான விழாவாக நடந்தது. விஷ்ணு விஷால் , முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் மனு ஆனந்த், இவர் கெளதம் வாசுதேவமேனனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. FIR வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் மற்றும் இயக்குனர்கள் கௌதம் மேனன், கெளரவ் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் மனு ஆனந்த் பேசும் போது, “முதலில் விஷ்ணு ஒரு நடிகராக மட்டும் தான் இந்தப்படத்திற்குள் வந்தார். வேறு ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை செய்ய முடியாத நிலை உருவானபோது, என் மீதும் என் திரைக்கதை மீதும் நம்பிக்கை வைத்து தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார். தயாரிப்பாளராக அவர் என்னிடம் சொன்னது, மனு நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் இந்தப் படம் வெற்றி பெறுவதை பொறுத்து தான் நான் அடுத்த படங்கள் தயாரிக்க முடியுமா என்பது முடிவாகும் என்றார். இன்று, அவருக்கு அதிக நம்பிக்கையளிக்கும் விதமாக இப்படத்தை கொடுத்துவிட்டேன் என்கிற திருப்தி எனக்கிருக்கிறது.
கௌதம் வாசுதேவன் மேனன் என் குரு, அவருடன் 8 வருடம் வேலை செய்திருக்கிறேன், இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்திலிருந்து மஞ்சிமா மோகன் அவர்களை தெரியும், சின்ன வயதிலிருந்தே நடிப்பதால் அவருக்கு கேமரா பயமே இருக்காது, மிகச் சிறந்த நடிகை. டயலாக் பெருசா இருக்கு, என்னால் பேச முடியாது என சண்டை போடுவார். ஆனால் ஒரே டேக்கில் முடித்து விடுவார். ரைசா வில்சனை மீட் பண்ணி பத்து நிமிடத்தில் அவர் என் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவர் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் அவருக்கு இரட்டை குணம் இருப்பது போன்ற பாத்திரம் ஆனால் திறமையாக செய்துள்ளார். இவர்களை தவிர மாலா பார்வதி , அமான் , ராம்ஜி எல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள். அபிசேக் இந்தப் படத்திற்கு பிறகு நன்றாக வருவார் என நம்புகிறேன். பிரசாந்த் ரங்கசாமி அவரது ரியல் லைஃப் பாத்திரம் போன்றே நடித்திருக்கிறார். இயக்குநர் கௌரவ் எனக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். சில்வா மாஸ்டர் எனக்கு பத்து வருட பழக்கம், தயங்கி தான் அவரிடம் கேட்டேன் என் மீதான பாசத்தில் தான் இந்தப் படம் செய்தார்...” என்றார்
ரைசா வில்சன் , “எனது கதாபாத்திரம் சவாலாக இருந்தது, இதை மிஸ் பண்ண கூடாது என முடிவு செய்தேன். இந்த படத்தில் எனக்கு துப்பாக்கி தந்தார்கள், எனக்கு துப்பாக்கி என்றாலே பயம், ஆனால் சில்வா மாஸ்டர் தான் என்னை இயல்பாக்கி நடிக்க வைத்தார்...” என்றார்.
டிசைனர் பூர்த்தி, “இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் என்பதால் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக காஸ்ட்யூம் என்று மிகவும் மெனக்கெட்டிருக்கிறோம்..” என்றார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், அருள் வின்சென்ட் எடிட்டராக பணியாற்றியிருக்கிறார், ஜீ கே பிரசன்னா.
இசையமைப்பாளர் அஷ்வத் பேசும் போது, “இந்த படத்தில் ஐந்து பாடல் இருக்கிறது அதில் இன்று ஒரு பாடல் வெளியாக உள்ளது. இதில் நிறைய பேர் பாடியுள்ளார்கள், வேலை பார்த்துள்ளார்கள். எல்லோருக்கும் நன்றி. ஐந்து பாடல் எடிட்டில் தப்பித்து வந்துவிட்டது, விஷ்ணு விஷால் படங்களில் நிறைய பெரிய இசையமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள், ஆனால் அவர்களை தாண்டி என்னை தேர்ந்தெடுத்தது எனது பாக்கியம்.. இயக்குனர் மனு வாய்ப்பு தேடிய காலத்தில் அவர் வைத்திருந்த மற்ற ஸ்கிரிப்டுக்கும் என்னை தான் இசையமைப்பாளராக வைத்திருந்தார் ..” என்றார்.
நடிகை மஞ்சிமா மோகன் , “எங்கள் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு நன்றி. இந்தப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கியிருக்கிறோம், பூர்த்தி மிகச்சிறப்பாக ஸ்டைலீஷ் செய்துள்ளார் ஒரு படத்திற்கு மிக முக்கியம் கதாப்பாத்திரத்தின் ஸ்டைல் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் அனைவரும் ஹீரோ ஹீரோயினாக இல்லாமல் படத்தில் எல்லோரும் கதாபாத்திரங்களாக வந்துள்ளார்கள். விஷ்ணு தயாரிப்பாளராக நடிகராக இரண்டு வேலை பார்த்தார். அவரது பொறுமை என்னை பிரமிக்க வைத்தது. படம் அருமையாக வந்துள்ளது..” என்றார்.
விஷ்ணு விஷால் மேலாளர் தங்கதுரை, “விஷ்ணு விஷாலுடன் நீர்ப்பறவை படத்திலிருந்து இணைந்து பயணிக்கிறேன். அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனமும் உறுதுணையாக இருந்துள்ளது. இந்தப்படத்தின் கதையை கேட்டபோது இதை தயாரிக்க முடியுமா? என தோன்றியது ஆனால் எல்லோருக்கும் கதை பிடித்திருந்து இன்று ரசிகர்களுக்காக படமாக உருவாகியுள்ளது..” என்றார்.
விஷ்ணு விஷால் தந்தை, “என் மகன் ஒரு நல்ல மனிதனாக ஸ்டாராக வந்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் தான் காரணம். இன்று அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்..” என்றார்.
நடிகர் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசும் போது, “எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம் இது. மாடு மேய்த்து படித்து ஐ பி எஸ் ஆனவர் என் அப்பா, அவர் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது.
மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன், இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன். இன்று 4 படங்கள் செய்கிறேன், எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. அவர் கூட்டி வந்தவர் தான் ஷ்ரவந்தி. பேசும்போதே பாஸிட்டிவாக இருந்தார். அவர் என் தங்கையின் இடத்தை பிடித்திருக்கிறார். மனு எப்போதும் என்னை பெரிதாக யோசிக்க சொல்வார். என்னை பெரிதாக மாற்றியிருக்கிறார். நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார், ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. லாக்டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும் மீண்டும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்...” என்றார்.
குள்ல நரிக்கூட்டம் முதல் இன்று வரை தன்னுடைய படங்களை வெளியிட்டு ஆதரவு தரும் உதய்நிதி, செண்பகமூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் விஷ்னு விஷால்.