அதென்ன கண்மணி மானசி..? படத்தின் பெயர் கண்மணி தான், ஆனால் , நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானசி தான் முக்கிய கதாபாத்திரம். ஒவ்வொரு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் கண்மணியாக விளங்குகிறார் மானசி என்றால் அது மிகையாகாது தானே! அந்த கண்மணி.மானசி மையக்கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கண்மணி பாப்பா.
ஸ்ரீமணி இயக்க தமன் குமார், மியா ஸ்ரீ, மானசி, சிங்கம் புலி, சிவன், லாரன்ஸ் நடித்திருக்கும் கண்மணி பாப்பா படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சிவி.குமார், எழுத்தாளர் - இயக்குநர் கேபிள் சங்கர், ஒளிப்பதிவாளர் ஜீவன், நடிகர்கள் ஆரி, அசோக் மாறன், நகைச்சுவை ஜாம்பவான் ஈரோடு.மகேஷ் ஆகிய திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கண்மணி பாப்பா படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. எம் சி சாராதா, சிவசங்கர் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
விழாவில் பேசிய ஈரோடு மகேஷ், " தமன் மிகச்சிறப்பான நடிகர். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி பெயர் வாங்கி கொண்டுள்ளார். மிகச்சிறந்த நாயகர்களுள் ஒருவராக வலம்வருவார்.." என்றார்.
விழாவில் பேசிய கேபிள் சங்கர், " ஒரு டைரக்டரா நான் யோசித்தால் எனது முதல் தேர்வு தமனாகவே இருக்கும். அப்படி ஒரு நல்ல நடிகர். இந்தப்படத்தை பார்த்துவிட்டேன். படமும் இசையும் நன்றாகவே இருக்கிறது. இது ஒரு கியூட்டான ஹாரர் படம்..." என்றார். பொதுவாக கேபிள் சங்கர் திரை விமர்சகராகவும் அறியப்படுபவர். அவர் படத்தை முன்னாடியே பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால், நம்பி டிக்கெட் புக் பண்ணலாம்.
நடிகர் அசோக் பேசும்போது, " 2 மணி நேரம் இருட்டில் உட்கார்ந்து படம் பார்க்கும் ரசிகர்கள் தான் எங்களைப் போன்ற கலைஞர்களை மேடைவெளிச்சத்தில் அமரவைக்கிறார்கள். அந்த ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக கண்மணி பாப்பா இருக்கும்.." என்றார்.
நாயகன் தமன் பேசும்போது, "மிகவும் வித்தியாசமான மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதையால் படத்தை மிகவும் சிறப்பானதாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீமணி. இசையமைப்பாளர் ஸ்ரீசாய்தேவின் இசையும் இப்படத்திற்கு இன்னொரு தூணாக.இருக்கும். உடன் நடித்த லாரன்ஸ் மிகப்பெரிய நடிகராக உருவெடுப்பார். வியாபாரத்திற்காக போடப்பட்ட முதல் பிரத்யேக திரையிடலிலேயே படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கிவிட்டார்கள்..." என்றார்.
ஒளிப்பதிவாளர் ஜீவனின் உதவியாளர் ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய கண்மணி பாப்பா படத்தை சுந்தர் ஜி தயாரித்திருக்கிறார்.