எழுத்தாற்றல் என்கிற கூடுதல் தகுதியுடன் திரைப்படத்துறையில் இயக்குநராகவோ நடிகராகவோ சாதிக்கவேண்டும் என்று வருபவர்களின் தற்காலிக வேடந்தாங்கலாக திரைப்பட பத்திரிகையாளர் என்கிற துறை விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில், கடந்த பல வருடங்களாக சினிமா பத்திரிகையாளராக பணியாற்றி வரும் செந்தில்குமரன் அவ்வப்போது ஒரு சில நல்ல கதாபாத்திரங்களில் வெள்ளித்திரையிலும் இடம்பிடித்து வருகிறார்.
விஜய் இயக்கத்தில், நாளை வெளியாக இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்தான வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
திமுக உருவான போது எம் எல் ஏ ஆகி தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெ ஆகியோருடன் பயணித்த முக்கியமான எம்.எல்.ஏ ஒருவராக அவர் இப்படத்தில் சிறப்பாகவே நடித்து ஜெயலலிதாவாக நடித்த கங்கனா ரனாவத் உள்ளிட்ட சக நடிகர்களிடம் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
திரைப்பட பத்திரிகையாளராக அனைத்து முன்னணி இயக்குநர் நடிகர்களை எளிதில் சந்தித்து விடலாம் என்பது எந்தளவுக்கு சாதகமோ, அதே அளவிற்கு புறக்கணிப்புகளையும் சந்திக்கவும் வேண்டும் என்பதும் துரதிஷடமான உண்மை.
ஒரு நேர்மையான பத்திரிகையாளராக செயல்படும் போது சில படைப்புகளை பற்றிய உண்மையான நேர்மையான விமர்சனங்களை யும் முன்வைக்கவேண்டியிருப்பதே அதற்கு காரணம்.
அதனை சிறப்பாக அவர் செய்துவருகிறார் என்பதே கொடுக்கும் வேலையை செந்தில்குமரன் சிறப்பாக செய்வார் என்பதற்கு சான்றாக எடுத்துக்கொண்டு, இன்று பல இயக்குநர்கள் அவருக்காகவே பிரத்யேகமாக கதாபாத்திரங்களை எழுத ஆரம்பித்திருப்பது ஒரு ஆறுதல்.
இன்று முன்னணியில் இருக்கும் பல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் சினிமா பத்திரிகையாளர்களாக பணியாற்றியவர்களே.
அந்த வகையில் இன்று பத்திரிகையாளராக இருக்கும் செந்தில்குமரன், விரைவில் முழுநேர நடிகராக மிளிர வாழ்த்துகள்.