-K.Vijay Anandh
இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டுவிழாவையும் இந்திய சுதந்திரப் போராட்டக்களத்தில் மாவீரனாக ஜொலித்த வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150 ஆம் ஆண்டு விழாவையும் முன்னிட்டு இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப்போராட்ட வீரர்களை போற்றும் விதமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், ஹிந்தி என்று திரைப்படத்துறை இருக்கும் 12 மொழிகளில் பெருங்காற்றே எனும் பாடல் தொகுப்பு வெளியாக இருக்கிறது.
சக்ரா பவுண்டேஷன் வழங்க ஏ ஆர் ராஜசேகர் இயக்கத்தில், ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாக உள்ள இந்த இசை தொகுப்பிற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தமிழில் அருண்ராஜா காமராஜ பாடல் எழுத, மற்ற 11 மொழிகளிலும் அந்தந்த மொழியில் சிறந்து விளங்கும் பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதுவார்கள். 6 நிமிடங்களில் அத்தனை சுதந்திரப்போராட்ட வீரர்களையும் காட்டி அவர்கள் சார்ந்த பகுதிகளையும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பயணித்து படப்பிடிப்பு செய்யவிருக்கிறார்கள் ஏ ஆர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர்.
இது குறித்து பேசிய ஏ ஆர் ராஜசேகர், " 75 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்பதில் நாங்கள் முந்திக்கொண்டோம் என்பதில் பெருமை. பெரும் செல்வந்தர், மூன்றாம் தலைமுறை வழக்கறிஞர் தனது அத்தனை சுகங்களையும் தியாகம் செய்து, சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு செக்கிழுத்த செம்மல். வியாபாரத்திற்காக வந்து நம் தேசத்தை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரனை விரட்ட அதே ஆயுதத்தை கையிலெடுத்து அவர்களை விரட்ட இரண்டு கப்பல்கள் வாங்கி ஓட்டியவர். சுதந்திரப்போராட்டக் களத்தில் ஒரே மாவீரர் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் புகழப்பட்டவர் வ.உ.சிதம்பரனார். அவரது 150 ஆவது ஆண்டையும் இணைத்து கொண்டாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம்.." என்றார்.
" இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழிலிருந்து தேவாரப்பாடல் இசைக்கப்பட்டது. 50 ஆவது ஆண்டுவிழாவில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான வந்தே மாதரம் தேசம் முழுவதும் ஒலித்தது. இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு சமர்ப்பணமாக உருவாகப்போகும் பெருங்காற்றே... பாடல் தொகுப்பிற்கு இசையமைப்பதில் மகிழ்கிறேன்.." என்றார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
இதுகுறித்து நடந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப்பேரன் சுப்ரமணியும் கலந்துகொண்டனர்.
பெருங்காற்றே .. பாடல் தொகுப்புடன் வ.உ.சிதம்பரனார் எழுதிய புத்தகங்களின் தொகுப்பும் வெளியிடப்படவிருக்கிறது.
முத்தாய்ப்பாக, வ.உ.சிதம்பரனார் பற்றி எழுதப்பட்டு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தடைசெய்யப்பட்டு லண்டன் மியுசியத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகம் மீட்கப்பட்டு, முழுமையாக்கப்பட்ட பதிப்பாக தமிழ்ப்பெருஞ்சொல் வ.உ.சி என்று தமிழிலும் The Big Word VOC என்று ஆங்கிலத்திலும் வெளியிடப்படவிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இந்த அளப்பரிய பணியை தன்னிச்சையாக முன்னெடுத்திருப்பவர் எழுத்தாளர் ரங்கையா முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன், இந்தியாவின் புகழ்பெற்ற 75 ஓவியர்கள் தீட்டப்போகும் 6 கிமீ நீள, சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் சம்பவங்களின் ஓவியங்கள், அத்துடன் வ.உ.சி 150 என்கிற தலைப்பில் வ.உ.சியைப் பற்றி பல்வேறு துறைசார்ந்த 150 பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ஒரு புத்தகமும் வெளியாகவிருக்கிறது.
ஆகஸ்டு 15, 2021 முதல் ஆகஸ்டு 15, 2022 வரையிலான இந்த ஆண்டு இன்றைய தலைமுறைகளின் இதயத்தில் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஆழப்பதிக்கும் ஆண்டாக அமையைப்போகிறது என்றால் அது மிகையல்ல.
Ice Bucket Challengeபோன்று சமூகவலைத்தளங்களில் 75 years Independence challenge உருவாக்கப்பட்டு தங்களுக்கு பிடித்த சுதந்திரப்போராட்ட வீரரைக் குறிப்பிட்டு, உங்களுக்கு பிடித்த சுதந்திரப்போராட்ட வீரரை பதிவிடுங்கள் என்று நண்பர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வமான தொடர் பதிவு ஆரம்பத்து வைக்கப்பட்டது. இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் வ.உ.சி யைப்பற்றி குறிப்பிட்டு ஜிவி.பிரகாஷ் குமாரிடம் கேட்டுக்கொள்ள, அவர் வாஞ்சிநாதனை குறிப்பிட்டு ஆர்.டி.ராஜசேகரை கேட்டுக்கொள்ள அவர் சுப்ரமணிய பாரதியை குறிப்பிட்டு நடிகர் லாரன்ஸுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். விழாவில் கலந்துகொள்ள முடியாத அருண்ராஜா காமராஜாவும் சுப்ரமணிய பாரதியை குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த தொடர் பதிவுகள் நாடுமுழுவதும் பரவி அனைத்து சுதந்திரப்போராட்ட வீரர்களும் நினைவுகூறப்படுவார்கள் என்றால் அதைவிட இந்த சுதந்திர தினத்தை சிறப்பிக்க வேறென்ன இருக்க போகிறது.
பூலித்தேவன் முதல் கொடிகாத்த குமரன் வரையில் இந்திய சுதந்திரப்போராட்ட களத்தில் தமிழர்களின் பங்கு எந்தளவு மகத்தானதோ, அந்த தமிழக சுதந்திரப்போராட்ட வீரர்களுடன் இந்தியாவின் பிறபகுதிகளிலிருந்தும் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்ற அத்தனை வீரர்களையும் இந்த தேசம் முழுவதும் உள்ள மக்கள் நினைவுகூறி கொண்டாடப்போகும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை முன்னெடுத்திருப்பதும் நம் தமிழர்களே என்பது போற்றத்தக்கது.