K.விஜய் ஆனந்த்
இந்த தலைப்பை பார்த்தவுடன் நமக்கு நடிகர் விவேக் தான் சற்றென்று நினைவுக்கு வரும். அவரைப்போலவே கே.பாலசந்தரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டு அப்துல் கலாமால் சமூகப்பணிக்கு பணிக்கப்பட்ட இன்னொருவர், நடிகர் தாமு, இந்த தலைப்பு அவருக்குமானது.
2010 ஆம் ஆண்டுவாக்கில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமு, அதே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த அப்துல் கலாம் வருகை தாமதமானதால், இரண்டே முக்கால் மணி நேரம் அரங்கில் கூடியிருந்தவர்களை தனது மிமிக்ரியாலும், அது எப்படி சாத்தியமாகிறது என்பதை அறிவியல் ரீதியாகவும் விளக்கி கட்டிப்போட்டு விடுகிறார். தாமதமாக அ ந் நிகழ்ச்சிக்கு வந்து சேரும் அப்துல் கலாமிற்கு தாமுவின் பேச்சுத்திறன் பிடித்துப்போக, நீங்கள் பேசுங்கள், மாணவர்களிடமும் பெற்றோரிடம் பேசுங்கள், குறைந்தது 50 லட்சம் மாணவர்களிடம் பேசுங்கள், அவர்களது கல்வியை மேம்பட உதவுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்.
அதனை அந்த நொடியிலேயே சிரமேற்கொண்டு செயல்படுத்த ஆரம்பித்த தாமு என்கிற டாக்டர் தாமோதரன், இதுவரை தமிழகம் மற்றும் இந்தியாவின் பிறபகுதிகள் என்று பயணீத்து இதுவரை 20 லட்சம் மாணவர்கள், 30 லட்சம் பெற்றோர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் என்று பள்ளி, கல்லூரி அளவில் சந்தித்து அவர்களது குறிப்பாக மாணாக்கர்களின் கற்கும் திறனை மேம்படுத்தியிருப்பதுடன், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமைகளையும் புரிய வைத்திருக்கிறார்.
இவரது இந்த அளப்பரிய சேவையை பாராட்டி கெளரவிக்கும் விதமாக, மத்திய கல்வி அமைச்சகம் 2021 க்கான ராஷ்ட்ரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் என்கிற விருதுக்கு தாமு வை தேர்ந்தெடுத்திருக்கிறது.
இதனை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஜே.கே அறக்கட்டளை நீறுவனரும் திரைபடத்தயாரிப்பாளருமான ஜெய கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தாமுவுடன், கலாமுடன் பணியாற்றிய இளம் விஞ்ஞானி டாக்டர் ஹேமச்சந்திரன் ரவிக்குமாரும் கலந்துகொண்டார்.
“ இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி, எனது பொறுப்புகளை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. என் வாழ் நாள் முழுவதும் அப்துல் கலாம் சொன்னது போல மாணவர்களையும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களையும் சந்தித்துக் கொண்டே இருப்பேன். நான் சந்தித்து உரையாடிய மாணவர்கள் இன்று சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புகளை வகிக்கிறார்கள், அதுவே எனக்கு மிகப்பெரிய விருதாக தெரிகிறது. கலாம் 2020 ல் நம் நாடு வல்லரசாகும் என்று கனவு கண்டார், இன்று அதற்கான சாத்தியக்கூறுகளை நாம் எட்டிப்பிடித்து விட்டோம். நிச்சயம் 2023 இல் அது முழுமையாக நிறைவேறும்..” என்றார்.
அடிப்படையில் மருத்துப்படிப்பை முடித்திருந்தாலும் ஸ்பேஸ் விஞ்ஞானியாக திகழ்பவரும் 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானீ விருதைப் பெற்றவருமான டாக்டர் ஹேமச்சந்திரன் ரவிக்குமார் பேசும் போது, “ நடிகர் தாமு வின் வீடியோ ஒன்று என்னையும் புரட்டிப்போட்டது. சிறுவயதில் நம்மையையுமறியாமல் நமது ஆசிரியர்களைக் காயப்படுத்தியிருப்போம். அந்த குற்றவுணர்ச்சி எனக்கும் இருந்தது. அப்படி ஒரு ஆசிரியரைச் சந்தித்து மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தாமு வின் வீடியோ எனக்கு அக்குற்றவுணர்ச்சியை நீக்கும் விதமாக அமைந்தது. இவர் செய்து கொண்டிருக்கும் மிகச்சிற்ந்த பணிக்கான அங்கீகாரம் இன்னும் பெரிதாக கிடைக்க வேண்டும். எனது N & H Organisation சார்பாக அடுத்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருது இவருக்கு அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்க்வுள்ளேன்..” என்றார். இவர் தேவர் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஜெய கிருஷ்ணா பேசும் போது, “ நமது பாரம்பரியங்களையும், தனி மனித ஓழுக்கம் மற்றும் ஆரோக்கியம் பேணுவதாகவும், தர்மப்படி நடக்க வழி வகை செய்வதாகவும் நமது கல்வி முறை இருக்கவேண்டும். அப்படிப்பட்ட கல்வி முறையால் 7 ஆண்டுகளில் மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்கிவிடமுடியும்...” என்றார். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4 கோடிக்கும் அதிகமான அளவில் செலவு செய்து கல்வித்தொண்டாற்றி வருகிறார் தனது ஜே,கே கல்வி அறக்கட்டளை மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை மயிலாப்பூரில் இயஙகிவரும் நூறாண்டு பழமையான ஆதரவற்றவர்களுக்கான பி வி ராவ் பள்ளியின் தலைமையாசிரியர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக, அப்துல் கலாமல் தேசிய நாயகனாக்கப்பட்ட சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர் நினைவாக ஒரு மரக்கன்றும் நடப்பட்டது.