இன்றைய சூழ் நிலையில் படம் வெளியாகி ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்து வரச்செய்வது ஒரு புறம். ஆனால், படம் வெளியாகும் முன்பே இந்தப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்வது இன்னொரு ரகம். அந்த வகையில், பிரமாண்ட தயாரிப்பாளர் விளம்பர உக்திகளின் மன்னன் கலைப்புலி எஸ் தாணு எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தவர் என்றால், தனது முதல் படத்திலேயே படத்திற்கு முன்னரே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அவரது இயக்கத்தில் தனுஷ் வேறு சேர்ந்துகொள்ள கேட்கவா வேண்டும், படத்தில் இடம்பெறும் கிட்டத்தட்ட கதறல் வகையான ஒரு பாடலை ராப் பாடலாக தீ பாட, சந்தோஷ் நாராயணின் இசையில் உருவான அந்தப்பாடல் கர்ணன் படத்திற்கு மிகச்சிறந்த விளம்பரத்தை பெற்றுத்தரும் என்றால் அது மிகையாகாது.
அத்துடன், ராப் இசையாக கொடுக்கும் போது, நம் தமிழை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் அது ஏதுவாக அமையும்.
அப்படி ஒரு பாடலாக வுட்றாதீங்க அம்மோ.. வுட்றாதீங்க அப்போ… என்கிற நெல்லைத் தமிழை ராப் இசையில் கொடுத்த பாடலாக அப்பாடல் அமைந்தது அனைவரையும் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல.
1997 ல் நடந்த உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் தனது மண் சார்ந்த கதையாக கர்ணனை உருவாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இப்படத்தின் கதையை கேட்டமாத்திரத்தில் தனுஷும், கலைப்புலி எஸ் தாணுவும் ஓகே செய்திருக்கிறார்கள், இவ்வளவுக்கும் அன்றைய நிலையில் அவர்கள் பரியேறும் பெருமாள் படத்தை பார்த்திருக்கக் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பரியேறும் பெருமாள் படத்தில் வந்தது போலவே , நகைச்சுவை என்கிற பிராண்டை கழட்டி வைத்து விட்டு, இன்னொரு அற்புதமான குணச்சித்திர கதாபாத்திரமேற்றிருக்கிறார் யோகிபாபு.
மாரி செல்வராஜின் ஊர்க்காரர்கள், குறிப்பாக 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கொரானா அச்சுறத்தலையும் மீறி, நம்ம பையன் நல்லா வரனும் என்பதற்காக மிகவும் சிறப்பான நடிப்பை வழங்கி ஆச்சிரியப்படுத்தியிருக்கிறார்கள், தனுஷ் உள்ளிட்ட அனுபவ நடிகர்களை.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடன இயக்கு நர் சாண்டி சொன்னது தான் அல்டிமேட், “கர்னன், அசுரன்”
ஆம், பாடல் காட்சிகள் மற்றும் பிரத்யேக டிரையலர் ஆகியவற்றை பார்த்த போது, கலைப்புலி எஸ் தாணு – தனுஷ் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற அசுரனைப் போலவே, கரணனும் வெற்றியைத் தருவான் என்றால் அது மிகையல்ல.