அட இது வரை ஏ ஆர் ரஹ்மான் இசையில் என்றுதானே பார்த்திருக்கிறோம்! இதோ ஏ ஆர் ரஹ்மானின் எழுத்தில் 99 சாங்ஸ் என்று ஒரு படம் வெளியாகவிருக்கிறது.
தனது பெயரை போட்டாலே ஓடிவிடும் என்கிற நிலையில் ஒரு சில நாட்களில் இக்கதையை எழுதிவிடவில்லை ஏ ஆர் ரஹ்மான். 5 வருடங்களாக எழுதி ஒரு அற்புதமான கதையை உருவாக்கியிருக்கிறார். விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தை ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்து ஜியோ ஸ்டுடியோஸ் ஹிந்தியில் தயாரித்திருக்கிறது. படம் ஏப்ரல் 16 ஆம் தேதி ஹிந்தி மற்றும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் மதன் கார்க்கி, விவேக், குட்டி ரேவதி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
99 சாங்ஸின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, பிரமிட் நடராஜன், புஷ்பா கந்தசாமி, இயக்குநர்கள் ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், கெளதம் வாசுதேவ மேனன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன், சித் ஸ்ரீராம் உள்ளிட்ட பாடகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஏ ஆர் ரஹ்மான் ஐந்து வருடமாக யோசித்து கதை எழுதினாலும், அதன் மையக்களம் இசைதான் என்பதை குறிப்பிடவும் வேண்டுமோ!
600க்கும் மேற்பட்டோரை கடந்து தேர்வான நாயகன் இஹான் பட் படத்திற்காக சென்னையில் ஒரு வருட்ம் தங்கி இசை கற்றுக் கொண்டார். நாயகியாக எடில்சி வர்கஸ் அறிமுகமாகிறார்.