செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரிக்க அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்தாலும் விஜயகுமார், ராதரவி, மனோபாலா, தம்பிராமையா, சாம்ஸ், ரேகா உள்ளிட்ட 39 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல செய்தியையும் கொண்டுவந்திருக்கிறது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக இயக்குநர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா , “ இந்த அரசாங்கத்தில் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு நிறைய உதவ வேண்டும் என்று தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் முடிவுசெய்துள்ளது.
அறிமுக இயக்குநர் என்றாலும் திறமைகளோடு இருக்கும் இயக்குநர்களுக்கு 5 கோடி வரையில் படம் தயாரிக்க உதவ இருக்கிறோம். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளின் பேரில் சினிமாத்துறைக்கு என்ன செய்யவேண்டுமோ அதனைச்செய்யக் காத்திருக்கிறோம்..” என்றார்.
“ஒரு திரைப்படம் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாகவேண்டுமானால் அதன் தயாரிப்பு நிர்வாகியின் பங்கு மிகவும் முக்கியமானது..” என்று ராதாரவி, ஆர் கே செல்வமணி, மனோபாலா ஆகியோர் பேசினர்.
ஆர்.கே செல்வமணி பேசும்போது, “இந்தப்படத்தின் இயக்குநர் கதிர்வேலு மிகவும் திறமைசாலிதான். ஏனென்றால், இவ்வளவு நடிகர்ளை ஒன்றாக வைத்து என்னால் ஒரு போட்டோ கூட எடுக்க முடியாது. ஆனால், கதிர் வேலு முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார். இப்படி பல நடிகர்களை வைத்துக் கொண்டு படமெடுக்க நாயகனின் ஒத்துழைப்பும் அவசியம். சசிகுமாரும் பாராட்டுக்குரியவரே! நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களைக் கவரும்..” என்றார். அதையே நடிகை ரேகாவும் பதிவுசெய்தார்.
மேலும், திரைப்படத்தொழிலாளிகளில் 7 ஆயிரம் பேருக்கு மேல் காப்பீடு வசதி செய்யப்பட்டிருப்பதாகவும், மீதி தொழிலாளர்களுக்கும் விரைவில் காப்பீடு வசதி செய்யப்படும் என்றும் ஆர் கே செல்வமணி தெரிவித்தார்.
நடிகர் ராதாரவி பேசும் போது, “ டப்பிங் கலைஞர்களுக்கும் தேசியவிருது கொடுக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை ராஜேஷ் கண்ணாவிடம் வைத்தேன். உடனே ஆவண செய்வதாக உறுதியளித்திருக்கிறார், வரும் ஆண்டு முதல் தேசிய அளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் டப்பிங் கலைஞருக்கு தேசிய விருது கிடைக்கும்..” என்றார்.
இயக்குநர் கதிர்வேலு பேசும்போது, “சசிகுமாரும் சரி தயாரிப்பாளரும் சரி கதையைக் கேட்டவுடன் ஒத்துக்கொண்டார்கள். இந்தப்படம் இன்னைக்கு இப்படியொரு நிலைக்கு வந்திருக்கிறது என்றால் முழு முதல் காரணம் தயாரிப்பாளர் தான். நான் யோசித்த விஷயங்களை அப்படியே திரையில் கொண்டு வர அவ்வளவு உறுதுணையாக இருந்தார்.. சசிகுமார், நிக்கி கல்ராணி என்று இருவரிடம் மட்டும் தான் முழுக்கதையையும் சொன்னேன். 40 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் மற்றவர்களுக்கு கதையைச் சொல்லமுடியவில்லை. அன்றன்றைக்கான காட்சிகளை மட்டுமே விளக்கி படப்பிடிப்பு நடத்தினோம்/ ஒளிப்பதிவாளர் சித்தார்த் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகியோர் தங்களது பங்கினைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்..” என்றார்.
நடிகர் சசிகுமார் பேசும்போது, “ராஜவம்சம் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிற படம். அதைக் குடும்பமாகப் பார்க்கும் போது நம்ம எல்லாருக்கும் பிடிக்கும். நாற்பது நடிகர்கள் இருக்கிற படம்னா பட்ஜெட் ஜாஸ்தியாக இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா மிகவும் நம்பிக்கையாக இருந்தார். இந்தப்படம் ஒரு நல்ல பீல் குட் Feel Good படமாக இருக்கும். மூத்த கலைஞர்களோடு நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தில் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள். சினிமாவிலும் நாம் ஒரு குடும்பமாகத் தான் இருக்க வேண்டும்" என்றார்