24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் பரமபதம் விளையாட்டு. திரிஷாவின் 60 படமாக உருவாகியிருக்கும் இந்தப்படம் இசையமைப்பாளராக அம்ரீஷுக்கு 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு பாடலை எழுதியிருக்கிறார், தரண். தொலைக்காட்சியில் இருந்து மற்றுமொரு வரவாக திரைத்துறைக்குள் வந்திருக்கிறார் இப்படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்திருக்கும் சங்கீதா. ஆர் டி ராஜசேகருடன் பல படங்களுக்கு உதவியாளராகப் பணியாற்றிய ஜே டி இப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
படவெளியீட்டுக்கு முந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்கள் ஹெச்.முரளி, டி சிவா, கே ராஜன் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் ஏற்கனவே இப்படத்தைப் பார்த்துவிட்ட நிலையில் படத்தை வெகுவாகப் பாராட்டினர். திரிஷா, அறிமுக நாயகன் விஜய்வர்மா மற்றும் குழந்தை நட்சத்திரம் மானஸ்வியின் நடிப்பை மனதாரப் பாராட்டியவர்கள், படவிளம்பரச் சந்திப்பிற்கு திரிஷா வராததையும் கண்டிக்கத் தவறவில்லை. தொடர்ந்து இப்பட விளம்பரச் சந்திப்புகளைப் புறக்கணித்தால், திரிஷா தனது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என்று டி சிவா எச்சரித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ், “இப்படத்தின் தலைப்பு ‘பரமபதம் விளையாட்டு’ அருமையான தலைப்பு. இத்தனை காலம் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அந்த தலைப்பை வைத்த இயக்குநர் திருஞானத்திற்கு பாராட்டுக்கள். டிரெய்லரைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதற்காக யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.
சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார்.
நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. நேற்றுதான் என்னை அழைத்தார்கள். நடிகை ஜெயசித்ராவிற்காகத்தான் வந்தேன். ஏனென்றால், ஒரு விழாவிற்கு அழைத்தால், அப்படத்தைப் பார்த்தால் தான் அப்படத்தைப் பற்றி நல்ல விஷயங்களைக் கூறி வியாபாரத்திற்கு நன்மை செய்ய முடியும்.
தயாரிப்பாளர் கே.ராஜன் எப்போதும் மற்றவர்கள் பிரச்னைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவர். அதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் செய்த நற்செயல்களுக்கும் முதல் ஆளாகப் பாராட்டக்கூடியவரும் அவர்தான். அனுபவ தயாரிப்பாளர்களின் அறிவுரைகளை நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் ஏற்றுக் கொண்டு நடப்பதில் தவறில்லை..” என்றார்.