பொறுப்பில் இருந்து விலகுவதை அல்லது அறத்தில் இருந்து விலகுதலைக் கல்தா கொடுப்பது என்பார்கள். பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து ஜெயிக்கும் அரசியல்வாதிகள் பின்பு அவற்றை நிறைவேற்றாமல் மக்களுக்கு கல்தா கொடுத்துவரும் நிலையில், கல்தா கொடுக்காத அரசியல்வாதியாக உருவாக அரசியல் பழகு என்கிற தலைப்புடன் இப்படம் உருவாகியிருக்கலாம்.
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா- அரசியல் பழகு” மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடனும் வணிகரீதியில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் வகையிலும் இப்படம் உருவாகியுள்ளது. ஹரி உத்ரா இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் சிவ நிஷாந்த் நாயகனாக அறிமுகமாக, ஐரா நாயகியாக நடித்திருக்கிறார். நிஜவாழ்க்கையில் அரசியல்வாதியாக இருக்கும் கல்வியாளர் ஹுமாயுன் நல்ல அரசியல்வாதியாக “ நடித்து” இருக்கிறார்.
வைரமுத்து, வித்யாசாகர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு ஜெய் கிரீஷ் இசையமைத்திருக்கிறார். ராதாரவி, கே பாக்யராஜ், இயக்குநர் லெனின் பாரதி ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் கல்தா – அரசியல் பழகு படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.
வில்லனாக நடித்திருக்கும் கருணாநிதி பேசியபோது, “ முறையில்லாமல் அப்புறப்படுத்தப்படும் மருத்துவக்கழிவுகளால் வைரஸ் எப்படி உருவாகிறது என்பதைப் படத்தில் காட்டியிருக்கிறோம்..” என்றார்.
”ஏம்மா வில்லனாக நடித்திருக்கும் கருணாநிதி.. வில்லனாக நடித்திருக்கும் கருணா நிதி… என்று திரும்பத்திரும்ப அழைக்கிறீர்கள்… பாவம்யா அந்த மனுஷன் போய்ச்சேர்ந்துட்டார்…” என்று தனக்கே உரிய அரசியல் நையாண்டியுடன் பேச ஆரம்பித்த ராதாரவி, “ நாயகன் சிவ நிஷாந்த் உயரமாக கருப்பாக கலையாக இருக்கிறார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்காலம் நன்றாக இருக்கும்..” என்று விஷாலையும் சீண்டினார். தொடர்ந்து பேசிய அவர், “இயக்குநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்த சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். இந்தப்படம் ஜெயிக்க வேண்டும்…” என்று வாழ்த்தினார்.
மேற்குத் தொடர்ச்சி மலை படநாயகனும், இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவருமான ஆண்டனி, “மேற்கு தொடர்ச்சி மலை, என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும் மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். ஆகவே, நல்ல கதாபாத்திரத்திற்காகக் காத்திருந்து கல்தா –ஆரசியல் பழகு படத்தில் நடித்திருக்கிறேன்..” என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசியபோது, “கலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவை கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும்..” என்றார். தீவிர கம்யூனிசவாதியாக அறியப்பட்ட இவர், கம்யூனிசம் ஆளும் பக்கத்து மா நிலத்தில் இருந்து எங்கள் பகுதிகளில் கூட குப்பைகள் கொட்டப்படுகின்றன என்பதை மிகவும் நேர்மையாக மேடையில் சுட்டிக்காட்டினார்.
இயக்குநர் பாக்கியராஜ் , “ கல்தா – அரசியல் பழகு… எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும் இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். அரசியல் சாதாரணமாக வந்துவிடாது, அது இரத்தத்திலேயே இருக்கவேண்டும். ஆனாலும், பொதுமக்கள் தங்களுக்கும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் சிறந்த விஷயங்கள் நடக்கவேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச அரசியல் அறிவாவது பெற்றிருத்தல் அவசியம். அதைத்தான் இப்படம் சொல்கிறது என்று கருதுகிறேன்…” என்றார்.
மலர்க்கொடி, ரகுபதி, செ.ஹரி உத்ரா, ரா.உஷா ஆகியோர் தயாரித்திருக்கும் இந்தப்படம் விரைவில் வெளியாகிறது.