நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர். சென்னைக்கு வரும் போதே இயக்கு நர் கனவுடன் வந்த அவர், வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டு நராகப் பணியாற்றியிருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் அவரைச் சுற்றி நடந்த சுவராஸ்யமான நிகழ்வுகளைக் கதையாக எழுதி, அதையே தான் தனது முதல் படமாக இயக்கவேண்டும் என்கிற வைராக்கியத்துடன் பல வருடங்களாகப் போராடி தற்பொழுது ஜெயித்தும் இருக்கிறார்.
ஒரு சிலரைத் தவிர முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க கன்னி மாடம் படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில், கன்னிமாடம் படத்தின் இசையை மூத்த இயக்குநர் விக்ரமன், பட்டிமன்ற பேச்சாளர் லியோனி, பரத், விஜயசேதுபதி, சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டு வெளியிட்டனர் ஆட்டோ ஓட்டுநர் சீருடையுடன் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர் போஸ்வெங்கட் உள்ளிட்ட 25 ஆட்டோ ஓட்டு நர்கள் பெற்றுக் கொண்டனர்.
இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்று பெயர் எடுத்தவர் போஸ்வெங்கட், ஆனாலும், கன்னிமாடம் படத்தைப் பொருத்தவரை அவர் அறிமுகம் தான் என்பதாலோ என்னவோ, மேடையில் இரண்டாவது வரிசையில் கடைசியாக அமர்ந்ததுடன், தனது படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களையும் விருந்தினர்களையும் சிறு முன்னுரை கொடுத்து பேச அழைத்ததும் நெகிழ்வான தருணங்களாக அமைந்தன.
அறிமுக இசையமைப்பாளர் ஹரி சாய் இசையில், ரோபோ சங்கரும் ஒரு பாடலைப்பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோவைப் பற்றிய அவர் பாடியிருப்பதைத் தொடர்ந்து, ரோபோ சங்கரை ஆட்டோ சங்கர் என்று தவறுதலாக அழைத்து ஷாக் கொடுத்த லியோனி, “ ஆட்டோ பாடலைப் பாடிய ரோபோ சங்கர்..” என்று திருத்திச் சொன்னதுடன் மட்டுமல்லாமல் அந்தப் பாடலைப் பாடி அசத்தினார். ” எத்தனையோ பட்டிமன்ற மேடைகள், அரசியல் மேடைகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், நான் முதன் முதலாகக் கலந்துகொண்ட திரைப்பட இசை வெளியீட்டு விழா மேடை இதுதான்..” என்று குறிப்பிட பட்டிமன்ற பேச்சாளர்களில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் திண்டுக்கல் லியோனி, தமிழ் சினிமாவில் ரிக்ஷா, ஆட்டோ (பாட்ஷா) போன்ற வாகனங்களை வைத்து வெளிவந்த பாடல்களை ஒரு கலை ஆர்வலராகக் குதூகலத்துடன் பாடி அசத்தினார்.
“கவண் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த நிலையில், அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்குக் கொஞ்சம் வழுக்கைத் தலையானவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று இயக்கு நர் கே வி ஆனந்த் சொன்னதையடுத்து, நன்றாக இருந்த முடியை மழித்து முன் வழுக்கையுடன் வந்து நின்றார் போஸ் வெங்கட்..” என்று அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டினார் விஜய்சேதுபதி.
ஸ்ரீ ராம் கார்த்திக் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவபுரம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தோனி தாசனும் இப்படத்தில் பாடியிருக்கிறார். விவேகா பாடல்கலை எழுதியுள்ளார்.
இப்படத்தைப் பார்த்த செண்பகமூர்த்தி, “ கடந்த 25 ஆண்டுகளில் நான் பார்த்த இரண்டாவது சிறந்தபடம் ..” என்று கூறி போஸ்வெங்கட்டைப் பாராட்டியது மட்டுமல்லாமல் தனது எம் எஸ் பிலிம்ஸ் சார்பாக கன்னிமாடத்தை வெளியிடவும் செய்கிறார்.