அப்பொழுது வெளியான ஒரு படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஒரு பிரமாண்டமான படத்தை ஆரம்பிக்கும் வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளர், இப்படி ஒரு மென்மையான கதை ஒன்று இருக்கின்றது, கேட்கிறிர்களா..? என்று அவரது ஆடிட்டரின் வேண்டுகோளுக்குச் செவிமடுத்து, இந்தக் கதையைக் கேட்டிருக்கிறார். கதையைக் கேட்டமாத்திரத்தில், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த படவேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு , அடுத்த நாளே இந்தப் படத்தை ஆரம்பிக்கிறார்.
முதல் சந்திப்பிலேயே அரை மணி நேரம் தாமதமாக வந்தும், அடுத்தடுத்து சொன்ன வேலைகளைக் குறிப்பிட்ட நாளில் முடிக்காத நிலையிலும், இயக்கு நரின் படைப்பைப் பார்த்துவிட்டு அவரை மனதார வாழ்த்துகிறார்.
படம் வெளியீட்டிற்கு முன்பே தெலுங்கில் இருந்து ஒரு பெரிய நிறுவனம் இப்படத்தின் தெலுங்கு உரிமையைக் கேட்க, தமிழில் இயக்கியவர் தான் தெலுங்கிலும் இயக்கவேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனையுடன் உரிமையைக் கொடுக்கிறார்.
அது மட்டுமல்லாமல், பிப்ரவரி 14 ஆல் படம் வெளியாகும் நிலையில், இப்பட அனுபவம் குறித்து மிகவும் ஆர்வமுடம் பகிர்ந்துகொண்ட தயாரிப்பாளர், “ நான் மிகவும் திட்டமிட்டு வேலை செய்பவன், எங்களது முந்தைய படங்கள் திட்டமிட்ட நேரத்திற்குள் வேலைகள் முடிக்கப்பட்டு, குறித்த நேரத்தில் வெளியாகின…
ஆனால், இந்தப்படத்தின் இயக்குநர் எனக்கு நேரெதிரானவர். எதையுமே குறித்த நேரத்திற்குள் முடிக்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாகப் படத்தைப் பார்த்த போது, பிரமித்துப் போனேன். அவ்வளவு நேர்த்தியாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார். பொதுவாக எங்களது படங்களில் பாடல்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது. இந்தப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி வகைப்படம் என்பதால் 8 பாடல்கள் இருக்கின்றன. இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு என்று அனைத்துமே சிறப்பாக அமைந்திருக்கிறது…
படம் வெளியாவதற்கு முன்னரே, டிரையலரைப் பார்த்தே தெலுங்கு உரிமை விற்பனை ஆகியுள்ளது. இந்தப்படத்தை தெலுங்கிலும் இந்த இயக்கு நரே இயக்குவார். அதை முடித்துவிட்டு அவர் விரும்பினால் எங்கள் நிறுவனத்திலேயே அடுத்த படத்தையும் இயக்கலாம்..” என்றார்.
முதல் பட இயக்குநர்களுக்கு சம்பளமே கொடுக்காத பல தயாரிப்பாளர்கள் இருக்கும் சூழ் நிலையில், பலகோடிகள் சம்பளவம் வாங்கும் இயக்குநர்கள் கதைக்கென்று ஆரோக்கியமான நியாயமான ஒரு செலவு கூட செய்ய மனமில்லாமல் இருக்கும் சூழ்நிலையில், அறிமுகமாக இருந்தாலும் அவரது கதைக்கும் திறமைக்கும் உரிய மரியாதை கொடுக்கும் தயாரிப்பாளர் இருக்கிறார் என்பதும் திரைத்துறைக்கு ஆரோக்கியமான விஷயமே!
அவர், ஆக்சஸ் பிலிம் பேக்டர் ஜி டில்லிபாபு, படம் ஓ மை கடவுளே! இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ஒளிப்பதிவு விது அய்யனா, இசை லியோன் ஜேம்ஸ், பாடல்கள் கோ சேஷா, கலை இராமலிங்கம், எடிட்டிங் பூபதி செல்வராஜ்
இணைத்தயாரிப்பாளராக ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா & அசோக் செல்வன்.
நடிகர்கள் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா, விஜய்சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் கெளரவத்தோற்றம்.
சகிதி பிலிம் பேக்டரி வெளியிடும் ஓ மை கடவுளே படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமுழுவதிலும் வெளியாகிறது.