இசையமைப்பாளர் பாடகராக இருந்த ஹிப் ஹாப் ஆதியின் திறமைகளை முழுமையாகப் புரிந்துகொண்ட அண்ணனாக, சுந்தர் சி தனது அவ்னி மூவீஸ் மூலம் மீசையை முறுக்கு, நட்பே துணை ஆகியபடங்களைத் தொடர்ந்து நான் சிரித்தால் என்கிற படத்தையும் தம்பி ஹிப் ஹாப் ஆதிக்காகத் தயாரித்திருக்கிறார். பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நான் சிரித்தால் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுகம் இராணா. இயக்கு நர் ஷங்கரின் உதவியாளரான இராணா ஏற்கனவே இயக்கியிருந்த நான் சிரித்தால் குறும்படத்தைப் பார்த்துவிட்டு, இதனைத் திரைப்படமாக எடுக்கலாமே என்று உத்வேகம் கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
83 படத்தின் முதல் பார்வை அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. படத்தில் கபில்தேவ் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ரன்வீர் கபூரின் அட்டகாசமான நிகழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கபில்தேவ் முதல் கமல்ஹாசன் வரை – ரசிகர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஏதேனும் வித்தியாசமாகச் செய்தால் தான் தங்களது படங்களை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கமுடியும் என்கிற நெருக்கடியைத் தமிழ்ப்படக்குழுவினர்களுக்குத் தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அந்த சவாலை ஏற்றுக்கொண்டது போன்று ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கும் நான் சிரித்தால் படத்தின் அறிமுக விழா மிகவும் சிறப்பாக நடந்தது. நாடகத்திலிருந்து சினிமா என்பது போல, மீண்டும் சினிமாவில் இருந்து நாடகத்திற்கான மேடையாக நான் சிரித்தால் மேடை அமைந்தது.
படத்தின் முதன்மை கதாபாத்திரமான காந்தி யைத் தேடிக்கொண்டே, அவரது டீம் லீடர் ராஜ்மோகன் முதல் வில்லன் கே எஸ் ரவிக்குமார் வரை படத்தில் தாங்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரப் பெயர் தாங்கி வந்து கலகலப்பூட்டினர்.அத்துடன், நாயகி ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நடன நிகழ்ச்சிகளுடன் நான் சிரித்தால் பட அறிமுக விழா களைகட்டியது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை குஷ்பூ, ”நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம்..” என்றார்.
ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது, “இப்படத்தில் எனக்குப் பிடித்த விஷயம், எந்த கவலைகளும் உள்ளுக்குள் கொண்டு போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற மையக்கருத்துதான்..” என்றார்.
இந்த படத்திற்காக சிரித்துக் கொண்டே காட்சி அமைக்க வேண்டி இருந்தது தான் அதிக சவாலாக இருந்ததாக சண்டை இயக்கு நர் பிரதீப் தெரிவித்தார்.
நடன இயக்குநர் ராஜ், சந்தோஷ் அற்றும் ஆடை வடிவமைப்பாளர் பிரீத்தி என்று கேமராவுக்குப் பின் உழைக்கும் கலைஞர்களையும் மேடையில் பேச வைத்து அழகுபார்த்தார் ஆதி.
’ஹிப் ஹாப் தமிழா’ஆதி, “என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘காந்தி’. எங்கெங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். இப்படம் எனக்கு சிறப்பான படம். அவ்னி மூவிஸ் நிறுவனம், சுந்தர்.சி கூட்டணியில் இது எனக்கு மூன்றாவது படம். ஆனால், எங்களது மூன்று படங்களுக்கும் மூன்று இயக்குநர்கள். என்னுடைய கனவுகளை இயக்குநர் சுந்தர்.சி நனவாக்கினார். இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் சுந்தர்.சி எனக்கு கொடுத்த சுதந்திரம் தான் காரணம். அதே வகையில் இப்படமும் வெற்றிபெறும்.
ஆரம்ப காலகட்டத்தில் ராப் பாடகராகத்தான் வந்தேன். நான் சுதந்திர பாடகராக வந்தபோது யாரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது தென் தமிழகத்தில் ‘ஹிப் ஹாப்’ பெயர் தனி மனிதனின் பெயராக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.. சென்னையில் தெருவோரங்களில் ‘வாட்டர் பாட்டில்’ என்ற குழுவுடன் இணைந்தோம். அதன்பிறகு ரேடியோவில் ‘வாடிபுள்ள வாடி’ பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைப் பார்த்து இயக்குநர் சுந்தர்.சி என்னை அழைத்தார். பாடலுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்த அவரிடம் ஒரு படம் கொடுங்கள் என்று கேட்டேன். அப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது…” என்றார்.
இயக்குநர் இராணா பேசும்போது, “உலக நாடுகளில் அதிக மன அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கிருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்னைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே இப்படம். ஆகையால், அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பாருங்கள்…” என்றார்.
இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் T.முருகானந்தம் வெளியிடுகிறார்.