தமிழகத்தைப்பொருத்தவரை அம்மா,. சின்னம்மா என்று அரசியலிலும் சித்தி என்று சின்னத்திரையிலும், அதற்கு முன்னதாக ஆச்சி என்று பெரிய திரையிலுமாக அம்மாவழி உறவுகள் தான் பிரபலம்.இந்நிலையில், பருத்தி வீரன் சித்தப்பு சரவணனைத் தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், ஒரே வாரத்தில் பிரபலமான அப்பா வழி உறவாக, அதுல்யா அத்தை… அதுல்யா அத்தை… என்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் தேட வைத்திருக்கும் அத்தை, அதுவும் வில்லத்தனமான அத்தையாக அறியப்பட்டிருக்கிறார் சுபாஷினி கண்ணன்.
சிறைக்காவலராக சுபாஷினி நடித்திருந்த பட்டாஸ் படத்துடன் 2020 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக ஆரம்பித்திருத்திருக்கும் நிலையில் நாடோடிகள் 2 மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
கூர்கா, அடுத்த சாட்டை, ஜாக்பாட் போன்ற படங்களில் கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நாடோடிகள் 2 இல் முகத்தில் பாசத்தையும் மனதில் வஞ்சத்தையும் சுமந்து நடித்த அதுல்யா அத்தை கதாபாத்திரம் இவரை யாருய்யா இந்த அத்தை என்று கவனிக்க வைத்திருக்கிறது.
முன்னதாக 2014 இல் பொதிகை தொலைக்காட்சியில் வி ஜே ஆகவும் ஹல்லோ எஃப் எம் இல் ஆர்ஜே வாகவும் பணியாற்றிக் கொண்டே டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் வலம் வந்துகொண்டிருந்த சுபாஷினி கண்ணன் இன்று இயக்குநர்களால் தேடப்படும் துணைக்கதாபாத்திர நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.
நாடோடிகள் 2 படத்தில், சசிகுமார், அஞ்சலி, அதுல்யா என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், தனுஷ்க்கே தண்ணி காட்டும் பவன் என்கிற நடிப்பு அரக்கனை பெட்டிப்பாம்பாக அடக்கிவிடும் அத்தை ( அவரது மனைவி ) யாக நடித்து மிரட்டியிருப்பார் சுபாஷினி கண்ணன். கணவனைப் பார்த்து, “கல்யாணம் செஞ்சுருக்கலாம் ஆனால், இரத்தம் கலந்துடக்கூடாது..” என்று யதார்த்தமாக மிரட்டுவதுடன், அண்ணனிடம் மட்டுமல்ல அனைவரிடத்திலும், “என் பொண்ணா இருந்தாலும் அப்படித்தான்..” என்று தன்னிலை விளக்கமும் கொடுக்கும் இடங்களில் யார்ரா இந்த அத்தை ..? இப்படிப்பட்ட அத்தை இருக்கும் வீட்டில் காதலித்து தொலைக்கக்கூடாதுடா என்று பலரையும் பயமுறுத்தியிருப்பார் என்றால் அது மிகையல்ல. விமர்சன எழுத்தாளர்களும் வீடியோ விமர்சகர்களும் இவர் பெயரை அறிந்துவைத்திருக்காத நிலையிலும், அதுல்யா அத்தையாக நடிப்பவர்... என்று குறிப்பிட்டு இவரைப் பாராட்டியிருப்பதே அதற்குச் சான்று.
“நடிப்பென்றாலும், டப்பிங் என்றாலும், பாடகி என்றாலும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து நற்பெயர் வாங்கவேண்டும்..” என்கிற சுபாஷினி கண்ணன், மனோரமா, வடிவுக்கரசி, காந்திமதி, கோவை சரளா போன்ற துணைக்கதாபாத்திர ஆளுமைகளை நிரப்பும் இன்றைய தலைமுறை நடிகைகளுள் முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறார் என்பதை, யார்ரா இந்த அத்தை என்று சகலரும் தேடிக்கொண்டிருப்பதில் உறுதியாகிறது.