காவலன் SOS குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடமும், பெண்களிடமும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்த நெல்லை மாநகர காவல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கல்லூரிகள், பள்ளிகள் , பொதுமக்கள் கூடும் பிரபல வணிக நிறுவனங்களில் மாநகர காவல் துறையினர் SOS செயலி குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றனர்.
SOS குறித்த விழிப்புணர்வை அடுத்த நகர்விற்கு எடுத்து செல்லும் பெரு முயற்சியாக நெல்லையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நெல்லை மாநகர காவல்துறை மற்றும் "நல்லதை பகிர்வது நம் கடமை" என்ற வாட்ஸ் அப் குழுவினரும் இணைந்து "Safety உங்கள் Choice" என்ற விழிப்புணர்வு குறும் படத்தை தயாரித்து உள்ளனர். இன்றைய சூழலில் முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்பு மற்றும் காவலன் SOSன் அவசிய தேவை குறித்தும் குறும்படம் எடுத்துரைக்கிறது.. படத்தில் நிஜ காவலர்களே நடித்தும் உள்ளனர்.
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர் IPS, "Safety உங்கள் Choice" குறும்படத்தை வெளியிட்டு அதன் ஆக்கத்தில் பங்குபெற்றவர்களை வாழ்த்தினார்.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் – சட்டம் ஒழுங்கு ச.சரவணன், குறும்படத்தில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன், கருத்துரை வழங்க, மாவட்ட அறிவியல் மைய இயக்குநர் முத்துகுமார், தொழிலதிபர் லயன் பெத்துராஜ், ரஜினி மக்கள் மன்றம் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
ஆர் ஜே வாகப் பணியாற்றும் வெங்கட்ராமன் முருகன் இந்தக்குறும்படத்தை இயக்கியுள்ளார், சிகா மணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.