-K.Vijay Anandh
இன்றைய தேதியில், தமிழக சூப்பர் ஹீரோ இல்லை இல்லை குட்டி சூப்பர் ஹீரோ மைட்டி மஹி தான் சமூகவலைத்தளங்களில் பிரபலம். அவரை சூப்பர் ஹீரோ என்று சொல்லுவதை விட உண்மையாகவே சூப்பர் ஹீரோ யார் என்பதை உணர்ந்துகொண்ட சூப்பர் ஹீரோ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
பொதுவாகவே நமக்குக் கொஞ்சம் அறிவும் வெளிவட்டாரத் தொடர்புகளும் கிடைத்துவிட்டாலே அத்தனையையும் கவனிப்போம், நம்மைக் கவனித்துக்கொள்பவர்களைத் தவிர. நமது சுமைகளை நம்மையறியாமலே சுமந்து கொண்டு, நம்மை சுதந்திரப்பறவையாய் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும், சிறைப்பறைவைகளைப் பற்றிய கதையாக, தெறிக்கவிட்டிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால்.
அடிப்படையில் ஆஜே வாகப் பணியாற்றிவரும் இவர் பல படங்களில் நடித்திருப்பதுடன், பல சுவராஸ்யமான குறும்படங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். தமிழகத்திலிருந்து யுடியூப் ஐகான்களாகப் புகழ்பெற்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் முன்னோடி இவர் என்றால் அது மிகையாகாது.
குறும்படங்களுக்கு என்றாலும் சரி பெரும்படங்களுக்கு என்றாலும் சரி கதை மிகவும் அழுத்தமாகவும் சொல்லும் விதம் சுவராஸ்யமாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாலாஜி வேணுகோபால், இவரது நண்பர்களின் படங்களுக்கான கதை விவாதங்களிலும் பங்கேற்று சிறந்த பங்களிப்பை வழங்கிவருகிறார்.
தொலைக்காட்சி பிரபலம் தீபக் கெளரவ வேடத்திலும், Mighty Mahi ஆக அக்னித் அவரது சூப்பர் மதராக மட்டுமல்ல அத்தனை அம்மாக்களின் பிரதிநிதியாக வான்மதி ஆகியோர் நடித்திருக்கும் Mighty Mahi ஒவ்வொரு வீட்டில் உள்ள குழந்தைகள் மட்டுமல்ல, மனைவி ஒரு ரோபோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தலைவர்களும் பார்க்க வேண்டிய குறும்படம் என்றால் அது மிகையாகாது.
ஐ மருத நாயகம், எஸ் கிருஷ்ணா ஆகியோரது ஒளிப்பதிவும் அபிஜித் ராமசுவாமியின் பின்னணி இசையும் பிகே & சிலம்பரசனின் எடிட்டிங்கும் ஒரு சிறந்த படத்திற்கான பணிகளுக்கொப்ப அமைந்திருக்கின்றன. கார்கி பாவா, கதையாக்கத்தில் உதவியிருக்கிறார்.
உங்கள் (வீட்டுப்) பெண்களுக்காக நில்லுங்கள் என்கிற கருத்தை விதைத்திருக்கும் பாலாஜி வேணுகோபாலுடன் உதவி இயக்குநராகவும் ஆங்கில சப் டைட்டில் எழுத்தாlளராகவும் நின்றிருக்கிறார் அவரது பெண், சந்தியா ராமன்.
Mighty Mahi குறும்படத்தைப் பார்க்க
https://www.youtube.com/watch?v=iRqLBP4lNjM