மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரிக்க, அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தனா இயக்கு நராகவும் வசீகரக்குரலோன் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகும் படம் ‘வானம் கொட்டட்டும். இந்தப்படத்தை ஒய் நாட் எக்ஸ் சார்பாக சசிகாந்த் வெளியிடுகிறார். படக்குழுவினர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரையலரை மணிரத்னம் வெளியிட்டார். வரும் பிப்ரவரி 8 முதல் சென்னை , பெங்களூரு , மும்பை என்று சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரிகள் நடக்கவிருக்கும் நிலையில், ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியாக வானம் கொட்டட்டும் இசைவெளியீட்டு விழா நடந்தது என்றால் அது மிகையாகாது. வானம் கொட்டட்டும் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் சித் ஸ்ரீராம் பாட அவரது குழுவினர் இசையமைத்தனர், ஒரு பாடலில் அந்தோனி தாசனும் இணைந்துகொண்டு பாடினார்.
பாடலாசிரியர் சிவா, “இப்படத்தில் 4 பாடல்களையும் நான் தான் எழுதினேன். இப்படத்திற்கு மற்றவர்களை விட தனாவின் பங்கு அளப்பரியதாக இருந்தது. சித்ஸ்ரீராம் பாடகராக வந்ததும் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்தது. புதுபுது யோசனைகளைக் கூறினார்..”
நடிகர்கள் விக்ரம்பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், சோனு ஆகியோர் மணிரத்னம் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியதை மிகவும் பெருமையுடன் பதிவு செய்தனர்.
இசையமைப்பாளர் சித்ஸ்ரீராம் பேசும்போது, “இசையமைப்பாளராக இப்படம் எனக்கு முதல் படம். இயக்குனர் மணிரத்னம் மற்றும் தனா இருவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். 1960களில் எனது தாத்தா இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். சமீபத்தில் மறைந்த அவரது ஆசியும் அவரது இசையும் தான் என்னை இங்கே நிற்கவைத்திருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களையும் சிவா எழுதியிருக்கிறார். இப்படத்தின் வாய்ப்பை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்..” என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, “இயக்குநரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. எனது கதாபாத்திரம் தலைக்கனத்தோடு இருக்கிறானா? அல்லது தன்னம்பிக்கையோடு இருக்கிறானா? இறுதியில் அவன் எடுத்த முடிவில் வெற்றிபெறுகிறானா? என்பது படம் பார்க்கும்போது தெரியும். முடிவு அனைவருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு நடிகனாக அனைவரும் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டத்தில் நேரடியாகத்தான் படப்பிடிப்பு நடத்தினோம்.
முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குநர் மணிரத்னம் வந்தார். அவரைப் பார்த்ததும் சிறிது பதட்டம் இருந்தது. பிறகு படம் முடிந்ததும் தான் அவரிடம் பேசினோம். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் நடித்தோம்.
ராதிகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவரை அக்கா என்று தான் அழைப்பேன். அவர் நடிக்கும்போது இயல்பாக இருக்கும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சுலபமாக நடித்துவிடுவார்..” என்றார்.
சரத்குமார் பேசும்போது, “தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும், குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி..” என்றார்.
இயக்குநர் தனா பேசும்போது, “வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். இந்த வாய்ப்பால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்..” என்றார்.