1985 இல் யார் என்கிற படம் மூலம் திரைப்படத்தயாரிப்புக்குள் அடியெடுத்து வைத்தவர் கலைப்புலி எஸ் தாணு. அன்றிலிருந்து இன்று வரை 35 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு படம் என்று நேரடித்தயாரிப்பிலும், 11 படங்கள் விநியோகம் செய்ததிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு, இன்று இவரைப்போல திரைத்துறையில் வேறு யார் இருக்கிறார் என்று பிறரைக் கேட்க வைத்திருக்கிறார்.
அவரின் சமீபத்திய தயாரிப்பான அசுரன் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து, படத்தில் பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனைபேருக்கும் நிஜமான 100வது நாள் கேடயம் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.
மூத்த விநியோகஸ்தர்கள் அபிராமி ராம நாதன், ரோகினி திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வம், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன், போஃப்டா தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திய விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் முதலான தொழில் நுட்பக்கலைஞர்களுக்கும் நாயகன் தனுஷ் முதலான நடிகர்களுக்கும் 100 வது நாள் கேடயம் வழங்கப்பட்டது.
“இந்த நாளில் படம் வெளியாகவேண்டும் என்று எந்த விதமான நெருக்கடியும் எனக்குத் தரப்படவில்லை. வழக்கமான எனது மற்ற படங்களில் எப்படி பணிபுரிந்தேனோ அதே மன நிலையுடன் தான் அசுரனிலும் பணிபுரிந்தேன்..” என்றார் வெற்றிமாறன்.
“அசுரன் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நேரத்தில் நான் லண்டனில் இருந்தேன். அம்மா கூட வருத்தப்பட்டார்கள், வெற்றி பெறும் போது வெகுதூரத்தில் இருக்கியேப்பா என்று… ஆனால், நான் சொன்னேன், இல்லை அம்மா, வெற்றி எப்பொழுதும் எனது பக்கத்தில் தான் இருக்கிறது என்று. ஆம், வெற்றிமாறன் தான் அந்த வெற்றி. பாலுமகேந்திரா வாயால் நாங்கள் இருவருமே அவரது மகன்களாக அறியப்பட்டோம். அப்படி ஒரு சகோதரர், நண்பர் வெற்றிமாறன். இன்னொரு வகையில், வெற்றியை தூரத்தில் வைத்திருந்து இயல்பாக இருப்பதும், தோல்விக்கு அருகே இருந்து ஏன் என்று ஆராய்ந்து அதனைக்களைவதுமே நல்ல விஷயங்கள். நான் வணங்கும் சிவன் எனக்கு அந்த நிலையை ஏற்படுத்தியிருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.
இந்தப்படத்திற்குச் சம்பந்தமே இல்லாத மாரி செல்வராஜ், நெல்லைத் தமிழ் சொல்லிக் கொடுத்து உதவினார். அவருக்கு நன்றி…
ஜீவி பிரகாஷின் இசை படத்தின் 25% வெற்றிக்குக் காரணம்..” என்றார் தனுஷ்.
வெள்ளந்தியாகப் பேசி நிகழ்ச்சியில் கலகலப்பூட்டினார்கள் எடிட்டர் ராமர் மற்றும் நடிகர் பவன்.
படங்கள் தயாரிப்பதில் மட்டுமல்ல, அவற்றை மிகச்சரியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் வல்லவர் தாணு என்று பாரட்டினார் அபிராமி ராமநாதன்.
100 வது நாளிலும் வசூலில் குறைவில்லாமல் படம் ஓடுகிறது என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் ரோகினி பன்னீர்செல்வம்.
நான்கு தலைமுறையாக வெற்றிப்படங்களைக் கொடுப்பவர் தாணு. அவரிடம் இருக்கும் உழைப்பும் நாணயமுமே அவரது இந்த நிலைக்குக் காரணம் என்றார் அன்புசெழியன்.
முத்தாய்ப்பாகப் பேசிய தாணு, “ எஸ் பி முத்துராமனுக்குப் பிறகு என் மனதைக் கொள்ளை கொண்ட இயக்குநர் வெற்றிமாறன். அவ்வப்போது படத்தின் சில காட்சிகளைப் போட்டுக் காட்டும் போதே முடிவுசெய்துவிட்டேன் இந்தப்படம் நிச்சயம் வெற்றிப்படம் தான் என்று. தனுஷ் ஒரு பிறவி நடிகன். சிவாஜிக்கு அப்புறம் நான் வியக்கும் நடிகன். படத்தில், பஞ்சாயத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு ஒவ்வொரு வீட்டார் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்கும் காட்சியைப் பார்த்து ரஜினியே வியந்தார். படத்தின் தயாரிப்பிலும் விநியோகத்திலும் பங்கெடுத்த ஒவ்வொருக்கும் என் மனமார்ந்த நன்றி..” என்றார்.