ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சாம்பசிவம் தயாரிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரமேஷ் ஜி இயக்கியிருக்கும் படம் அடவி. அடர்ந்த காடு என்கிற அர்த்தம் தரும் தலைப்புடன் உருவாகியிருக்கும் இந்தப்படம் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது.
கலை குமார், அட்டப்[பாடி ராதாகிருஷ்னன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் சரத் ஜடா. இப்படத்தின் இசையை இயக்கு நர் இமயம் பாரதிராஜா வெளியிட பாடலாசிரியர் சினேகன் மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர் சிவி குமார் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பேசிய சினேகன், “ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு மனுஷனையே கடிக்கிற மாதிரி , மண்ணைக்கடிச்சு, மலையைக் கடிச்சு இப்போ காட்டையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறோம். தனியாகவோ குழுவாகவோ மரங்கள் நடுகிறோம். அந்த மரங்கள் நன்றாக வளர்கின்றதா என்று பார்ப்பதில்லை, நாம் நட்ட மரங்கள் அத்தனையும் வளர்ந்திருந்தால் நமது நாடே ஒரு காட்டிற்குள் இருந்திருக்கும். வாழ்வியலைச் சொல்லும் படங்களே பெரிய படங்கள். அந்த வகையில் அடவி, காடுகளையும் காட்டில் வசிக்கும் மக்களையும் பற்றிச் சொல்லியிருக்கிறது. வாழ்வியல் படங்களின் முன்னோடி பாரதிராஜா, அவர் வந்து இந்த விழாவைச் சிறப்பித்திருப்பது பொருத்தமான செயல். சமூக முன்னேற்றத்திற்கு ஊடகங்களின் பங்கும் அவசியம். ஆக்கப்பூர்வமான செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு நல்ல சினிமாக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்…” என்றார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “ நேற்று இந்தப்படத்தைப் பார்த்தேன் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சிறு படங்களை வெளியிட ஆவண செய்யவேண்டும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பெரிய படங்களைப் பொருத்தவரை அவை எப்பொழுது வெளியானாலும் ரசிகர்கள் வந்துவிடுவார்கள்….” என்றார். படத்திற்கு வசனம் எழுதிய தேன்மொழி தாஸைக் குறிப்பிட்டு பாராட்டிய பாரதிராஜா, அவர் எழுதிய இய்ல்பான பல தமிழ் வசனங்களை தாமே இப்பொழுதுதான் கேள்விப்படுவதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக, வெனிசுலாவில் நடந்த ஐந்து கண்டங்களுக்கான சர்வதேச திரைப்படவிழாவில் அடவி படத்திற்கு Best Independent Film Maker, Best Producer Special Mention, Best Editor, Best Original Score and Best actor Special mention என்று ஐந்து விருதுகள் கிடைத்திருந்தன. அவற்றை இன்றைய விழா மேடையில் பாரதிராஜா கைகளால் வாங்கி மகிழ்ந்தனர் படக்குழுவினர்.
வினோத் கிஷன், அம்மு அபிராமி, விஷ்ணுபிரியா, ராஜபாண்டி ஆகியோர் அடவி படத்தில் நடித்திருக்கிறார்கள். நாயகன் வினோத் கிஷனுக்கு இந்தப்படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று அனைவரும் வாழ்த்தினார்கள்.