மறைந்த, இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் 5 ஆம் நினைவு நாளில், நடிகர்களாக மற்றும் இயக்குநர்களாக இருக்கும் அவரது மாணவர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள், அவரது ரசிகர்கள் ஆகியோரர்களை உறுப்பினராகக் கொண்டு கே பாலச்சந்தர் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது.
ரசிகர் மன்றத்தலைவராக நடிகர் ராஜேஷ், செயலாளராக பாபு மற்றும் பொருளாளராக இலியாஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்திய சினிமா ஆரம்பித்த முதல் நுறு ஆண்டுகளுக்குள் 100 படங்களை இயக்கிய இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் ரசிகர் மன்ற தொடக்க விழாவில், நடிகர்கள் சிவக்குமார், நாசர், ராஜேஷ் இயக்குநர் சரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“ சினிமாவில் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தேவர், பாலாஜி மற்றும் கே பாலச்சந்தர் ஆகிய மூவர் தான். கே பாலச்சந்தரைப் பொருத்தவரை நாகேஷ், கமல்ஹாசன், ரஜினிகா\ந்த் ஆகிய மூவரும் மிகவும் முக்கியமானவர்கள்.
சங்கீதமே தெரியாத என்னை சங்கீத வித்வானாக நடிக்க வைத்து படத்தை மிகப்பெரிய அலவில் வெற்றிபெறச் செய்தவர் கே பாலச்சந்தர்..” என்று பேசிய சிவக்குமார் கே பாலச்சந்தருடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நடிகர் ராஜேஷ், “சிறந்த நடிகன் என்று நான் அறியப்பட்டாலும் எந்த ஒரு விருதும் எனக்கு வழங்கப்படவில்லை. 84-85, 85-86, 86-87 காலகட்டங்களுக்கான கலைஞர்களுக்கான விருதுப்பட்டியலில் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் என்னையும் சேர்த்திருப்பதாக அறிகிறேன். ஆனாலும், இன்னும் அந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.
கே பாலச்சந்தரின் ரசிகர் மன்ற தலைவர் பதவி எனக்குக் கிடைத்திருப்பதையே ஆகச்சிறந்த விருதாகக் கருதுகிறேன்.
அந்த மாபெரும் படைப்பாளிக்கு ஒரு சிலை வைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. நானும் என் பங்குக்குக் கடினமாக முயற்சி செய்து அவருக்கு சிலை வைக்க ஆவண செய்வேன்…” என்று பேசினார் ராஜேஷ்.
ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அரிசியும் கஷ்டப்படும் ஒரு சில உதவி இயக்கு நர்களுக்குப் பண உதவியும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.