பொதுவாக, நாவல் முதல் மாங்கனி வரையிலான பல பழ மரங்களில் கல்லெறிந்து பழங்களை விழவைத்துச் சாப்பிடுவது என்றாலே ஒரு தனி சுவை தான். ஒரே கல்லில் பழம் கிடைக்கலாம் அல்லது பலகற்களில் பழங்கள் கிடைக்கலாம். கார்த்திக் சுப்பராஜிற்கோ எறியும் ஒவ்வொரு கற்களுக்கும் கனிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவை, அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் நிறைவைக் கொடுக்கின்றன. ஸ்டோன் என்று எடுத்துக் கொண்டால், அப்படி. ஸ்டோன் பெஞ்ச் என்று முழுமையாக எடுத்துக்கொண்டால், வாய்ப்புத் தேடும் இயக்குநர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள், நடிக நடிகையர் என்று பலருக்கும் கற்களால் உறுதியான இருக்கை அமைத்துக் கொடுக்கிறார்.
திரைப்படத்தயாரிப்புக்கென்று ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், இணைய தொடர்களுக்கு என்று ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ் மற்றும் Independant Film makers க்கான களமாக ஸ்டோன் பெஞ்ச் இண்டி என்று நிறுவனங்களை ஆரம்பித்து திறமைசாலிகளை அடையாளப்படுத்துகிறார். தனது மைத்துனர் கார்த்திக் சந்தானம் உள்ளிட்ட நால்வர் அணியாக இணைந்து இந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மூலம் ஏற்கனவே தயாரித்து வெளியான மேயாத மான், மெர்க்குரி ஆகிய படங்களைத் தொடர்ந்து 3க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பெஞ்ச் இண்டி யின் முதலாவது படமாக அல்லி யை வெளீயிடுகிறார்.
இந்தத் துறையில் ஏற்கனவே செக்ஸி துர்கா உள்ளிட்ட இண்டிபெண்டண்ட் சினிமாக்களை இயக்கி பெயர் பெற்றிருக்கும் சணல் குமார் சசிதரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியமொழிகளில் உருவாகியிருக்கும் அல்லி படத்தில் அகில் விஸ்வநாத் நாயகனாகவும், நிமிஷா நாயகியாகவும் , ஜோஜு ஜார்ஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இந்த 3 கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளி உலகமே தெரியாத நாயகியின் ஒரு நாள் சுற்றலா, அதில் ஏற்படும் விறுவிறுப்பான சம்பவங்கள் என்று அல்லி படத்தை இயக்கியிருக்கிறார் சணல் குமார் சசிதரன்.
அல்லி, வரும் இந்த டிசம்பரிலேயே வெளியாகவிருக்கிறது.