அலர் ஸ்டுடியோஸ் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கியிருக்கும் திருவாளர் பஞ்சாங்கம் படத்தின் பாடல்களை கே பாக்யராஜ் மற்றும் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் வெளியிட்டனர்.
இதுவரை கல்லூரி நடத்திக் கொண்டிருப்பவர்களே திரைப்படத்தயாரிப்புக்குள் அடியெடுத்து வைத்த நிலையில், முதன்முறையாக அல்லது கே.ராஜனுக்குப் பின் பள்ளிக்கூடங்கள் நடத்திக் கொண்டிருக்கும் மலர்விழி நடேசன் திரைப்படத்தயாரிப்புக்கு வந்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்திருக்கிறார்.
விழாவில் அவர் இயக்குநரான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது, “ எனக்கு சிறிய வயதில் இருந்தே திரைப்படங்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல நாளில் தயாரிப்பாளராய் தான் வந்தேன். ஆனால், நம்பக்கூடாதவர்களை நம்பி 12 நாளில் 1 கோடி ரூபாய் வரை இழந்தேன். குடும்பத்தினர் என்னை ஏளனமாகப் பார்க்க, அவர்களுக்கு முன் எப்படியாவது ஒரு படத்தை எடுத்துவிட்டுத்தான் போய் நிற்கவேண்டும் என்று முடிவு செய்து, கடந்த 10 மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் இந்தப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு கசப்பான அனுபவத்தைச் சந்தித்த பிறகு, என்ன தான் இருந்தாலும் இயக்குநர் பதவிக்கு இருக்கும் மரியாதையைப் புரிந்துகொண்டேன். சரி இனி நாமே இயக்குநர் ஆகிவிடுவோம் என்று முடிவு செய்து, திருவாளர் பஞ்சாங்கத்தையும் எடுத்து முடித்துவிட்டேன்..” என்றார் மலர்விழி நடேசன்.
இவரது நிலையை அறிந்த ஜாக்குவார் தங்கம், எஸ் ஏ சந்திரசேகரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட எழுத்தாளர் ஜெகன் உள்ளிட்ட திறமைசாலிகளை அறிமுகப்படுத்தி வைத்து திருவாளர் பஞ்சாங்கத்தை முடிக்க உதவியிருக்கிறார்.
படித்து பட்டம் பெற்ற ஒரு உயர் நடுத்தர வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோதிடம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான் என்கிற கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திருவாளர் பஞ்சாங்கத்தில், நாக் ஆனந்த், காதல் சுகுமார், ஊர்வசி, ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
”காதல் படம் தொடங்கி எத்தனை வருடங்களுக்குத் தான் கதா நாயகனின் காதலுக்கே உதவி செய்துகொண்டிருப்பது..? இதில் உல்டாவாக, நாயகன் நாக் ஆனந்த் எனது காதலைச் சேர்த்துவைக்கிறார். சொல்லப்போனால், நாயகனுக்கு ஜோடியே கிடையாது இந்தப்படத்தில்..” என்றார் காதல் சுகுமார்.
“இயக்குநராக அனுபவம் இல்லாவிட்டாலும், ஒரு Bar Song ஐ மிகவும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கெட்டு வேலை வாங்கினார் மலர்விழி நடேசன். ஒரு மாதம் பணியாற்றி நடனம் அமைத்த பாடல் இதுவாகத்தான் இருக்கும்..” என்றார் காதல் கந்தாஸ்.
கதாநாயகன் நாக் ஆனந்தின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட 7 நாட்களில் நடக்கும் சம்பவங்களே திருவாளர் பஞ்சாங்கம் என்கிற நிலையில். அந்த 7 நாட்களை இயக்கிய கே பாக்யராஜ், திருவாளர் பஞ்சாங்கத்தின் இசையை வெளியிட்டது சாலப்பொருந்தும் தானே!
இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு.