சந்தானத்தின் நண்பரான டாக்டர் சேது, ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கும் படம் காதல் மோதல் 50:50, தரண் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்களை தரணே வெளியிட கன்னட இசையமைப்பாளர் பாலாஜி பெற்றுக்கொண்டார்.
வழக்கமாக, சிறப்பு விருந்தினர்களை அழைத்துதான் பாடல்களை வெளியிடுவார்கள், அரிதான நிகழ்வாக அந்தப்படத்தின் இசையமைப்பாளரே இசை வெளியிட்டதும் அதனை இன்னொரு வளரும் இசையமைப்பாளர் பெற்றுக் கொண்டதும் சிறப்பம்சமாக அமைந்தது.
மூன்று பெண்கள் சேதுவைத் துரத்தி துரத்தில் காதலிக்க யாருக்குக் கிடைக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
“எனக்கு நன்றாக வருகிற தொழிலான மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம் என்று இருந்தேன். ஆனாலும், எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி, எனக்கு என்ன தெரியுமோ அதை பெஸ்டாக வாங்கியிருக்கிறார் இந்தப்படத்தின் இயக்குநர் கிருஷ்ண சாய் மற்றும் நடன அமைப்பாளர் அபிநய ஸ்ரீ…” என்றார் சேது.
ஆர்கே பிரதாப் ஒளிப்பதிவு செய்ய ராஜா சேதுபதி எடிட்டிங் செய்திருக்கும் இந்தப்படத்தில் இன்னொரு பக்கம், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், யோகிபாபு மூவரும் சகோதரர்களாக இருந்து நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். பாலசரவணன் , டிவி புகழ் கோதண்டமும் இருக்கிறார்கள்.
காதல், மோதல், நகைச்சுவை என்று ஜனரஞ்சகமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், விஜய் டிவி புகழ் பூவையாரும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
வி என் ரஞ்சித் குமார் படத்தைத் தயாரிக்க தத்தாத்ரி பிலிம்ஸ் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கியிருக்கிறார்கள்.
வி என் ஆர் நிறுவனம் ஐந்து படங்களைத் தயாரித்துவருகிறார்கள். அதில் சாவடி என்கிற படத்தின் நாயகன் நடன அமைப்பாளர் ஸ்ரீதர், நடிகர் அபி சரவணன் மற்றும் மூத்த நடிகை அனுராதா ஆகியோர் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வி என் ஆர் நிறுவனம் சார்பாக அலெஸ்சாண்டர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.