RPM சினிமாஸ் தயாரித்துள்ள படம் கருத்துக்களை பதிவு செய். எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாகவும் நாயகியாக உபாசனாவும் நடித்திருக்கும் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் கே.பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராகுல் பரமஹம்சா. கதை, திரைக்கதை, வசனம் எழுதிருக்கிறார் ராஜசேகர். ஜே எஸ் கே கோபி இந்தப்படத்தில் இணைத்தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார். ஸ்ரீ சிவ சாய் ஆர்ட்ஸ் கே.மோகன் தமிழகமெங்கும் படத்தை வெளியிடுகிறார்.
முகநூலால் ஒரு அப்பாவி கிராமத்து பெண் பாதிக்கப்பட்டு அவள் எப்படி அதிலிருந்து மீண்டு வந்து தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி அந்ந கயவர்களை தண்டிக்கிறார் என்பதைச் சொல்லி சமூக வலைத்தளங்களின் மூலம் ஏற்படும் ஆபத்துகள் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பதிவு செய் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எஸ் வி சேகர், கே ராஜன், டி எஸ் ஆர் சுபாஷ், போஸ் வெங்கட், அபி சரவணன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி ஆகியோர் கலந்துகொண்டனர். சொற்கோ எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கணேஷ் ராகவேந்திரா.
சென்ஸார் அதிகாரிகள் பார்த்து பாராட்டிய இந்தப்படத்தை மட்டுமல்ல, பல்வேறு பிரச்சினைகள் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களை ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இயக்குநர் ராகுல் பரமஹம்சா.
விழாக்கால விடுமுறையில் தங்கள் படங்களை வெளியிட்டு சிறுபடங்களை அழித்துக் கல்லா கட்டுபவர்கள் அல்ல சூப்பர் ஸ்டார்கள், சாதாரண நாட்களிலும் தங்கள் படங்களை வெளியிட்டு ஒன்றிரண்டு நாட்களே ஒன்றிரண்டு காட்சிகளே ஓடினாலும் நல்ல படம் என்று பெயர் வாங்கிக் கொடுப்பவர்களே சூப்பர் ஸ்டார்கள் என்று பேசினார் டி எஸ் ஆர் சுபாஷ்.
விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாக்கியராஜ் பேசியபோது, “என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால் தான். என் இயக்குநரிடம் இந்தக்காட்சி நன்றாக இல்லை என்று ஓப்பனாக சொல்லிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். அதுபோல் இந்தப்படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி வந்திருக்கிறார். அவர் எதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கை தான். எல்லாத்தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப்படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் படம் நல்லாருந்தால் நிச்சயமாக பாராட்டிவிடுவார்கள். இந்தப்படக்குழுவினர் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுக்கு தந்தை, பாதுகாப்பிற்காக தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், பெண்கள் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை, இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப் படுகிறது." என்றார்
சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி,” சமூக சிந்தனை கொண்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன். இப்போது சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதை எல்லோரும் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால் தமிழ்நாடு அரசால் முன்பு தொடங்கி கைவிடபட்ட அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி திரையுலகம் பயன்படும் வகையில் அதை அமைக்க கோரி சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்ப போகிறேன். மலேசியா மற்றும் கேரளாவில் உள்ளது போல் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கட்டாயம் 15நாள் தியேட்டர்கள் தரப்படவேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் அமைச்சர் கடம்பூர்.ராஜூவின் பார்வைக்குக் கொண்டுசெல்வேன்..” என்றார்.