வரும் 2021 இல் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிசயம் நடக்கும் என்று ரஜினிகாந்த் பேசியதிலிருந்து அதிசயம் என்கிற வார்த்தையே தமிழகத்தில் டிரெண்ட் ஆகிவிட்டது என்றால் அது மிகையல்ல. உபாசனா நாயகியாக நடிக்கும் கருத்துக்களைப் பதிவு செய் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட, நகைச்சுவையில் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி எஸ் வி சேகர், “ 2020 ஜனவரியிலேயே அதிசயம் நடக்கும்..” என்று பரபரப்பை கிளப்பினார்.
“ ஒரே நாள் இரவில் உருவான ஐடியா தான் இந்தப்படம் என்று பேசினார் இயக்குநர் ராகுல் பரமஹம்சா. ஒரே நாள் இரவில் புதிய ஆட்சிக்கான அடித்தளமே இடப்படுகிறது..” என்று கலகலப்பூட்டிய எஸ் வி சேகர் தொடர்ந்து பேசும் போது, “ படத்தின் இயக்கு நர் மிகவும் ஆவேசமாகப் பேசினார். எனக்கு கிரிக்கெட், புட்பால், ஹாக்கி தெரியாது நான் மிகவும் கஷ்டப்பட்டு கோலி ஆடியிருக்கிறேன் என்று. சினிமா என்பது மிகப்பெரிய மைதானம். இங்கே யார் வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் ஆடலாம். கிரிக்கெட் விளையாடுபவர் கோலி விளையாடுபவரைக் கிண்டல் செய்ய மாட்டார். அதுபோல, கோலி விளையாடிய ராகுலும் கிரிக்கெட் விளையாடுபவர்களைக் கிண்டல் செய்யக்கூடாது. எந்த விளையாட்டையும் திறமையாக விளையாண்டால் ஜெயிக்கலாம். படத்திற்கு 1 கோடியோ 100 கோடியோ எவ்வளவு செலவளித்தாலும், அது திரையில் தெரியவேண்டும். மக்களுக்கு, மாதம் 300 ரூபாய் தான் ஒதுக்கமுடியும். அவர்கள் நமது படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்யும் அளவிற்குப் படமெடுக்கவேண்டும், அவ்வளவே…
எட்டேமுக்கால் கோடி இருந்த தயாரிப்பாளர் சங்க நிதியில் இன்று 75 லட்சம் தான் இருக்கிறது. அதையும் வருமான வரித்துறையினர் முடக்கி வைத்திருக்கிறார்கள். நண்பர்களையும் தொழிலையும் சேர்க்கக்கூடாது. ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் தான், இந்த நிலைக்குக் காரணம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மார்ச்சில் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத்தவணை கட்டக்கூட பணமில்லை. அனைவரும் குறிபிட்ட நபரின் வீட்டின் முன்னால் நிற்பதைத் தவிரவேறுவழியில்லை.
அநேகமாக ஜனவரி 2020 ல், தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அதிசயம் நடக்கும்..” என்றார்.