அலெக்ஸ், சனம் ஷெட்டி நடித்த எதிர் வினையாற்று படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட நடிகர் ஆர் கே சுரேஷ், முத்தக் காட்சிகளில் தவறில்லை என்று கூறி பரபரப்பை எற்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் 10 வது ஆண்டில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வி நியோகம், தயாரிப்பு என்றிருந்த என்னை இயக்குநர் பாலா நடிகராக்கினார். இன்று நான் எதற்காக இத்துறைக்கு வந்தேனோ அதை அடைந்துவிட்ட திருப்தியில் இருக்கின்றேன்… தயாரிப்பாளர் அனிதா, எனது குடும்ப நண்பர். அலெக்ஸை நான் சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கின்றேன். டாக்டராக இருந்தவர் எப்படி படத்தைச் சரியாக எடுக்கப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்துவிடுவார் என்று முடிவு செய்துவிட்டேன். மனோஜ் மலையாளத்தில் பிரபலமான ஒளிப்பதிவாளர், அஜித் குமாரின் நெருங்கிய நண்பரும் கூட..
இந்தப்படத்தில் புதிதாக ஒரு விஷயத்தை அலெக்ஸ் கையாண்டிருக்கிறார். முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை. முத்தம் அன்பின் வெளிப்பாடு, அதுபோன்ற காட்சிகளைத் தவறு என்று சொல்லக் கூடாது. நிச்சயம் படம் பெரிதாக பேசப்படும்.
நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படாமல் சிக்கலில் உள்ளது வருத்தமடைய செய்கிறது. எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் என்று விஷாலிடம் கூறினேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. படங்கள் எடுப்பவர்கள் கவனித்து எடுங்கள். விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கங்கள் சரியாக இயங்கினால்தான் திரைத்துறை நன்றாக இருக்க முடியும்" என்றார்