கலைக்கூடம் வழங்கும் எஸ் நாரயணன் – எஸ் சரவணக்குமார் தயாரிப்பில் பி என் சி கிருஷ்ணா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கும் படம் குஸ்கா. கிஷோர் மற்றும் சஸ்வதா நாயக- நாயகியாக அறிமுகமாகும் இந்தப்படத்தில் கே.பாக்யராய், ரேகா, மயில்சாமி, அனுமோகன், டிபி கஜேந்திரன், அப்புக்குட்டி, அம்பானி சங்கர் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிக்கின்றது.
குஸ்கா படத்தின் இசையினை, இயக்குநர் – இசையமைப்பாளர் கிருஷ்ணாவின் 17 வருட நண்பரும் நடிகருமான ராம்கி வெளியிட ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் படக்குழுவினரும் பெற்றுக் கொண்டனர்.
சாலை விபத்தினை அடிப்படையாக வைத்து, ஒரு உணர்வுபூர்வமான கதையாக உருவாகியிருக்கும் குஸ்கா படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ரேகா, “ இந்த நிகழ்ச்சியில் என்னை இயக்கிய அனுமோகன், ரங்க நாதன், டிபி கஜேந்திரன் என்று மூன்று இயக்கு நர்களும் கலந்துகொண்டிருப்பதில் மகிழ்கிறேன். கே பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், ஞானப்பழம் என்கிற படத்தில் கிடைத்த சிறிய வாய்ப்பை என்னால் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை.
இந்தப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தான் என்றாலும், கே பாக்யராஜுக்கு ஜோடியாக நான் நடித்தபோது, காதல் காட்சிகளில் இப்படி நடி அப்படி நடி என்று என்னை இயக்காத குறையாக நடிப்புச் சொல்லிக் கொடுத்தார். ஆகவே, அவரது இயக்கத்தில் நடித்துவிட்ட திருப்தி எனக்கு குஸ்கா மூலம் கிடைத்துவிட்டது.
அபிராமி ராமநாதன் உள்ளிட்ட மூத்தவர்கள் சொன்னது தான், இது போன்ற சிறிய படங்களுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். சிறிய படங்கள் மட்டுமே திரையரங்குகளை மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் ஆண்டுமுழுவதும் பொழுதுபோக்குகளை வழங்குகின்றன. 150 பேர் கொண்ட திரையரங்கில் ஆயிரம் காட்சிகள் ஓடிவிட்டாலே இது போன்ற சிறிய படங்கள் தப்பித்துவிடும்…” என்றார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த இயக்குநர் ரங்க நாதன், “ அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். உண்மையில், சினிமாவில் தான் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு்ள்ளது. அன்றைய காலகட்டத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து, எடிட்டிங் செய்து, படத்தையும் இயக்கும் அஷ்டவதானி என்று அறியப்பட்டவர் டி ராஜேந்தர். அவரது வெற்றிடத்தை நீண்ட நாட்களாக யாராலும் நிரப்ப முடியவில்லை. குஸ்கா திரைப்படம் மூலம் இயக்கு நர் கே எம் சி கிருஷ்ணா அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார்.. புகைப்படக்கலைஞர், மேடை நாடகங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் முதல் சினிமா வரை என்று பெரிய அனுபவத்தைப் பெற்றிருக்கும் அவர், சினிமாவில் பெரிய உயரத்தை அடைவார்..” என்று வாழ்த்தினார்.