மிஷ்கின் படத்தில் தலைக்குனிந்துகொண்டே நடிக்கவேண்டும், ஆக்ஷன் படத்தில் நெஞ்சை நிமிர்த்தி நடித்திருக்கிறேன் என்று கலகலப்பூட்டினார் விஷால்.
சுந்தர் சி தனது வழக்கமான வகைப் படங்களிலிருந்து விலகி, முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக ஆக்ஷனை இயக்கியிருக்கிறார். சுந்தர் சியின் அறிமுகம் ஹிப்ஹாப் ஆதி தான் ஆக்ஷனுக்கும் இசையமைத்திருக்கிறார். இது வரை வந்த விஷால் படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படம் ஆக்ஷன் என்கிற பெருமையைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவிச்சந்திரன். 80 சதுர அடியில் ஆரம்பிக்கப் பட்ட இவர்களது தயாரிப்பு நிறுவனம் 25 ஆண்டில் பல கோடி ரூபாய்களை திரைப்படங்களில் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட விஷால், “சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி. ‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம் என்றாலும் ஆக்ஷன் இவரது பெருமை மிகு படைப்பு. எனது படங்களிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’தான். ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. அதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதர் அர்ஜுன் தான், ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.
எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. ஆகன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அவரைப் பல தடவை அடித்தேன். அதற்க்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்டாலும் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார் ஆகன்ஷா பூரி. சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். யூடியூப்-ல் சாரா உடைய குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர். 15 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளராக ஆகி விடுகிறார்கள்.
இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லக்ஷமி பேசப்படும் நாயகியாக வலம்வருவார்…” என்றார்.
துப்பறிவாளன் 2 திரைப்படம் லண்டனில் தயராகிவருவதால், உடனே லண்டன் கிளம்பிச் சென்ற விஷால், ”ஒவ்வொருத்தரும் , மற்றவர்க்கு ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டும்..” என்று கேட்டுக்கொண்டார்.
ஆக்ஷன் திரைப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது.