பவுன்சராக வரும் பந்துகளை லெக் திசையில் தூக்கி அடிப்பதில் கபில் தேவ் வல்லவர். அப்படி அடித்து முடிக்கும் நிலையில், அவர் நடராஜர் ஒற்றைக்காலத்தூக்கி நடனம் ஆடுவது போல இருப்பார். கபில்தேவாக நடிக்கும் ரன்வீர் அதுபோல அடித்தால் தானே நன்றாக இருக்கும். 1983 இல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியதை மையமாக வைத்து 83 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் கபில்தேவாக நடிக்கிறார் ரன்வீர் சிங்.
83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டனர். அது டுன்ப்ரிட்ஜ் வேல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.
கபில்தேவின் அரக்கத்தனமான பேட்டிங் வெளிப்பட்ட அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டியில் வென்றதன் மூலமாகவே இறுதிப்போட்டிக்குச் சென்றது இந்திய அணி. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவில் நிலைத்திருக்கும் போட்டியாக விளங்கினாலும், அந்தப்போட்டி எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிபராப்பாகாதது குறிப்பிடத்தக்கது. பதிவே செய்யப்படவில்லை என்பது தான் வேதனையின் உச்சம்.
அப்படிப்பட்ட இந்திய கிரிக்கெட்டின் பெருமை மிகு தருணங்களை ஆவணப்படுத்தும் பொருட்டு 83 என்கிற பெயரில் இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் 2020 ஏப்ரலில் வெளியிடுகிறது. கபீர் கான் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படம் விளையாட்டை மையப்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என்றால் அது மிகையல்ல. இப்படத்தை தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ரன்வீர் சிங்க் கபில்தேவாக நடிக்க, சுனில் கவாஸ்கராக தாஜீர் பாசின், மதன்லாலாக ஹார்டி சாந்து, மொஹிந்தர் அமர்நாத்தாக சகீப் சலீம், சாந்துவாக அம்மி வீர்க் பல்வீந்தர் சிங், சந்தீப் படீலாக சிராக் படீல், சையது கிர்மானியாக சாஹில் கட்டார், திலீப் வெங்சர்காராக ஆதிநாத் கோத்தரே, ரவி சாஸ்திரியாக தைர்யா கார்வா, கீர்த்தி ஆஸாத்தாக டின்கர் சர்மா, யஷ்பால் ஷர்மாவாக ஜதின் சர்மா, ரோஜர் பின்னியாக நிஷாந்த் தஹியா, சுனில் வால்சன்னாக ஆர் பத்ரி, பாரூக் என்ஜினியராக போமன் இரானி, மான் சிங்காக பங்கஜ் திரிபாதி நடிக்கும் இந்தப்படத்தில் அதிரடி தொடக்கவீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நம்மூர் ஜீவா நடிக்கிறார். கபில் தேவின் துணைவி ரோமி கபில்தேவாக தீபிகா படுகோனே மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருக்கிறது ரன்வீர் சிங்கின் ஒப்பனை. இந்த முதல் பார்வையைப் பார்த்து கபில்தேவே வியந்து பாராட்டியிருக்கிறார் என்பதே அதற்குச் சான்று.
அந்தக்குறிப்பிட்ட ஷாட் அடிக்கும் கபில் தேவின் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போன்று அச்சு அசலாக ரன்வீர் சிங் நடித்திருப்பதாகப் பார்ப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.