தீபாவளிக்கு திரைக்கு வந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் கார்த்தி நடித்த “கைதி”படத்தில், இரண்டாவது பாதியில் விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளியவர் மரியம் ஜார்ஜ். ஜார்ஜ் மரியான் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் சிற்சில துணைக் கதாபாத்திரங்களும் தலைகாட்டுபவர். ஆனால், தீபாவளிக்கு திரைக்கு வந்த இரண்டு படங்களின் மூலமாக அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளார்.
விஜய்யின் “பிகில்” படத்தில் பங்குத்தந்தையாக கலக்கியிருகும் இவர் கார்த்தியின் “கைதி” படத்தில் இக்கட்டான சூழ் நிலையில் விஸ்வரூபம் எடுக்கும் சாதாரண போலீஸ் கான்ஸ்பிடளாக அதிரடி காட்டியிருப்பார்.
நகைச்சுவையும் குணச்சித்திரமும் ஒருங்கே அமைவது அபூர்வம், அந்த அபூர்வம் வாய்க்கப்பெற்ற மரியம் ஜார்ஜுடன் ஒரு சந்திப்பு.
கைதி படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது ?
நான் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி, மக்கள் கொண்டடுகிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது.
கைதியில், இன்னொரு நாயகன் மாதிரி மாஸ் காட்டியிருக்கிறீர்களே, அந்த அனுபவம்..?
லோகேஷ் கனகராஜ், கதை சொல்லும்போதே இந்தப்படத்தில் எனக்கு முக்கியமான பாத்திரம், பேசப்படும் பாருங்கள் என்று சொன்னார். எல்லா இயக்கு நர்களும் இதைத்தான் சொல்வார்கள் என்று வழக்கம்போல முழு அர்ப்பணிப்பை இந்தப்படத்திற்கும் வழங்கினேன். ஆனால், இது எனது திரையுலகில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துவிட்டது. பிரமாதாமான குழு, நல்ல திரைக்கதை, கார்த்தியின் மிரட்டலான நடிப்பு என்று அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தது. .
நரேனும் சிறப்பாக நடித்திருந்தார். சத்யனோட ஒளிப்பதிவு , சாம் சி எஸ் இன் இசை என்று அனைவருமே கடுமையான உழைப்பைக் கொடுத்திருந்தார்கள். இப்படி ஒரு வெற்றிப்படத்தில நானும் ஒரு அங்கமாக இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
இணையம் முழுவதும் பாராட்டு கொட்டிக்கிடக்கின்றது. நெப்போலியன் கதாபாத்திரம் பற்றி அனைவருமே பேசுகிறார்கள். சூப்பரா நடித்திருக்கின்றாய் என்று சொந்தங்களும் பாராட்டுவதைக் கேட்க நிறைவாக இருக்கிறது.
நகைச்சுவை நடிகராக இருந்து மாஸ் போலீஸாக மாறியிருக்கின்றீர்கள், அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்.. ?
ஆம், இதுவரைக்கும் நகைச்சுவை நடிகனாகத்தான் நடித்திருக்கிறேன். சுந்தர் சி படங்களில் காமெடி போலீஸாக நடித்திருக்கிறேன், எல்லோரும் கொண்டாடுவார்கள். நம்மளைப் பார்த்து சிரிப்பார்கள். தடம் படத்தில் தான் முதல் முறையாகக் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தார் மகிழ்திருமேனி. ஆனால், கைதியில் ரொம்பவே கனமான பாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. என்னடா மக்கள் இதுவரைக்கும் காமெடியனதான் பார்த்திருக்கிறார்கள், இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில் எப்படி..? சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு யோசித்தேன். ஆனால் லோகேஷ் தான் தைரியமாக நடிங்க, மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார். அவருக்கு கதையில் பயங்கர நம்பிக்கை, அவர் கொடுத்த தைரியத்தால் தான் நடித்தேன்.
நகைச்சுவை நடிகராகப் பார்த்த என்னை இப்படிபட்ட பாத்திரத்தில மக்கள் ஏற்றுக்கொண்டதில் பெரிய மகிழ்ச்சி..
கார்த்தியோட நடித்த அனுபவம் ?
கார்த்தியும் நானும் கிளைமாக்ஸ் காட்சிகளில் தான் ஒன்றாக நடித்தோம். அதுவும் பயங்கரமாக வந்திருக்கின்றது. அதுவரைக்கும் அவர் கதை தனியாக நடக்கும். கார்த்தி நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு சுலபம் கிடையாது ஆனால் அவரே தான் படம் முழுக்க ஓட்டியிருக்கார், கார்த்தி தன்னோட வேலையில் மிகச்சரியாக இருப்பார், பின்னிட்டார். என்னுடைய காட்சி முழுக்க கமிஷனர் ஆபிஸ் தான், நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன்.
முழுக்க முழுக்க இரவில் நடந்த கதை, ஒளிப்பதிவு எப்படி இருந்தது..?
கேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்பான வேலை. முழுப்படமும் இரவில் ஷீட் பண்ணுவது மிகப்பெரிய கஷ்டம். அதுவும் அவுட்டோரில், எவ்வளவு லைட் வைக்க முடியும் சொல்லுங்க,.. ஆனால் படம் பார்க்கும் போது அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருகிறது.
இசை..
பின்னணி இசையில் சாம் சி எஸ் பின்னிட்டார். ஒரு பாட்டில எறிந்தால் அது எங்கே எதன் மீது விழுகிறது, அதற்கேற்ற ஒலி அமைப்பு என்று துல்லியமாக ஒலி அமைப்பு அமைந்திருக்கிறது. மக்கள் அனைத்தையும் உன்னிப்பாகப் பார்த்து பாராட்டுவதும் எங்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது.
கைதியின் முதல் பாராட்டு..?
கைதியின் பாராட்டுதான்…படம் பார்த்துவிட்டு கார்த்தி தான் என்னை முதன் முதலாக அழைத்துப் பாராட்டினார்.
விஜய்யின் பிகில் பட அனுபவம் பற்றி ?
விஜய் அருமையான நடிகர், அவரைத் திட்டுவது போல் ஃபாதர் கேரக்டர் எனக்கு, கொஞ்சம் பயமாகிவிட்டது, அவரிடம் முன்னமே கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க என்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லை இது படம் தான் நீங்கள் நன்றாக செய்யுங்கள் என்றார். எனது கூச்சத்தைப் போக்குவதற்காக காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனே தான் இருப்பார், எங்களுடன் தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை. பிகிலில் நடித்தது பெரும் சந்தோஷம்.
அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தீர்களே அவர் எப்படி ?
அவரும் மிகவும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக் கொள்வார். என்னென்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்த போது யூனிட்டுக்கே அவர் கையால் பிரியாணி சமைத்து தந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியே.
அடுத்த இலக்கு..?
ஒரே இலக்குதான், ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவிற்கு சிறந்த மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் அவ்வளவே!
ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?
ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள். என்னதான் திருட்டு வீடியோ அது இது என்று நடந்தாலும், நல்ல படங்களைத் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து கலைஞர்களைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்போம்.