இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சென்னையில் கமல்ஹாசன் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது நடைபெறப் போகும் மாநாடு குறித்து அவர் கூறியது : " ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.
மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.
சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
பிரச்னைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும். மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான், கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.
சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப்பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது. கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும் " என்று தெரிவித்தார்.
தரமான திரைப்படங்கள் எடுக்கப்படும் போது பெரும்பாலானத் திரையரங்குகளில் அதே தரத்துடன் அந்தத் திரைப்படங்களை கண்டு ரசிக்க முடியாத சூழலைப் பற்றிக் கேட்டபொழுது, “ தொழில் நுட்ப இடைவெளிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் இந்தக்குறைகள் கண்டிப்பாக களையப்படவேண்டும். இந்தத் தொழிலில் இருப்பவர்கள் புரிந்து கொண்டு அதனைச் சரி செய்யவேண்டும். ரசிகனுக்கு முழுத் தொழில் நுட்பமும் போய்ச்சேரவேண்டும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரித்து நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் குறிப்பாக IDBI வங்கி கடன் தரும் அளவிற்குச் சிறப்பான சேவையை FICCI வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பயிலரங்கத்தில் கலந்துகொள்ள சினிமாத்துறையினைச் சேர்ந்தவர்களுக்கு ரூ 1500 உம் மற்றவர்களுக்கு ரூ 5000 உம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Interested people can contact Christopher at 9677630686 or mail to kalyan@ficci.com