இந்தியத்திரையுலகின் இரண்டு திறமைசாலிகள் மம்முட்டி மற்றும் ராஜ்கிரண் முதன்முறையாக குபேரன் படத்தில் இணைகிறார்கள். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி 'குபேரன்' மூலம் ராஜ்கிரண், மலையாளத்திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களைத் தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணுடன் இணைகிறார் மீனா. 2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன், ஜான் விஜய் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க, முக்கிய வேடங்களில் அர்த்தனா பினு, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து மற்றும் சித்திக் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரிக்க, பிரபல மலையாள இயக்குநர் அஜய் வாசுதேவ், குபேரனை இயக்குகிறார். ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜய் வாசுதேவ் மூன்றாவதாக மம்மூட்டியுடன் இணையும் படம் குபேரன். மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குநர் இவரே. மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுத, ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரணும் விவேகாவும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.
ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்ட ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ், குபேரன் படத்தின் தமிழக உரிமையை வாங்கியிருக்கிறது.
டிசம்பரில் குபேரனைக் கண்டுகளிக்கலாம்..