நடிப்பு மீது அளப்பறிய ஆர்வம் கொண்ட விக்ரம், கிட்டத்தட்ட இன்றைய துருவின் வயதை விட இரண்டு மடங்கு ஆன நிலையில் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு வாய்ப்புகளைப் பெற்றார். அவர் விட்டதை, அவரது மகன் துருவ் பிடிக்க வந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி, ஹிந்தியில் கபீர் சிங்காகி அடுத்ததாக தமிழுக்கு ஆதித்ய வர்மா ஆக வந்திருக்கிறது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவின் உதவியாளர் கிரிசய்யா, ஆதித்ய வர்மாவை இயக்கியிருக்கிறார்.
தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறு அடி பாய்வான் என்பது முதுமொழி, அந்த மொழியை உண்மையாக்கியிருக்கிறார் துருவ் விக்ரம். விஜய் தேவரகொண்டா – ஷாலினி பாண்டே , ஷாகித் கபூர் – கியாரா அத்வானி ஆகிய ஜோடிகளை விட துருவ் விக்ரம் – பனிதா ஜோடி யின் கெமிஸ்ட்ரி அதிகமாகவே ரசிகர்களைக் கவரும் என்றால் அது மிகையல்ல.
விவேகா, விவேக், தாமரை ஆகியோருடன் சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுத, ரதன் இசையமைத்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டிக்கும் ரதனே இசையமைத்திருக்கிறார் என்பதும், தெலுங்கில் அந்தப் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதும், அதே ஆடியோ நிறுவனம் தான் ஆதித்ய வர்மா படப்பாடல்களையும் வெளியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழா மேடையில், எல்லாமே என் அப்பாதான் என்று துருவ் – உம், அவர் எனக்கும் மேலே என்று விக்ரமும் பரஸ்பரம் மகிழ்ச்சிகளைத் தெரியப்படுத்திக் கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம், பள்ளிக்கூட விழா மேடையில் தங்கள் பிள்ளைகளை, ம்ம்ம் நடி, பாடு, ஆடு என்று உற்சாகப்படுத்தும் பெற்றோர்கள் மன நிலையில் இருந்து, தன்னுடைய இமேஜ்களையெல்லாம் மறந்து, மகனை அந்த சீன் நடித்துக்காட்டு, இந்த சீன் நடித்துக் காட்டு என்று குதூகலித்தார் விக்ரம். “ துருவ் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும் மகிழ்ந்திருப்பேன். ஆனால், அவர் நடிக்க வந்ததில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஒரு அப்பாவாக, அவருக்கு ரசிகர்களைத் தவிர பெரிய சொத்துக்கள் எதையும் கொடுத்துவிடமுடியாது..” என்றார் விக்ரம்.
லண்டனைச் சேர்ந்த பனிதா முதன்மை நாயகி என்றால், பிரியா ஆனந்தும் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றிருக்கிறார். முதல்ப்பட நாயகர்களின் அதிஷ்ட தேவதையாக பிரியா ஆனந்த் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.
உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் என்று பல தெலுங்குப் படங்களில் பணியாற்றிய கிரிசய்யாவிற்குத் தமிழ்த்திரைப்பட உலகம் அறிமுக இயக்கு நர் அந்தஸ்தை அளித்திருக்கிறது. தெலுங்குப் பட மாஸ் நாயகர்கள் போல, இனி துருவ் தான் டாக் ஆஃப் தமிழ் நாடு என்று முழங்கினார் அவர்.
துருவ் இன் நண்பராக, அன்பு தாசனும் அப்பாவாக பாரதிராஜாவின் ராஜாவும் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஒரு உதவி இயக்கு நர் போலப் பணியாற்றியிருக்கிறார் விக்ரம். பழம்பெரும் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, ஆதித்ய வர்மாவைத் தயாரித்திருக்கிறார். “கபீர் சிங் படத்தில் எனது மகன் சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதன் தமிழ்ப்பதிப்பில், நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஷாகித் கபூர் அளவிற்கு நடிப்பாரா என்று யோசித்தேன். ஆனால், துருவ் வேறு ஒரு பரிணாமத்தைக் காட்டிவிட்டார்..” என்றார் ரவி கே சந்திரன்.
மூத்த தயாரிப்பாளர்கள் காட்ரகட்ட பிரசாத், ஆர்பி செளத் ரி, கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், ஒவ்வொரு பாடலையும் படத்தில் பணிபுரிந்த உதவி, துணை, இணை இயக்கு நர்களை வைத்து வெளியிடச் செய்தது புதுமையாகவும், அவர்களைக் கெளரவப்படுத்தும் விதமாகவும் இருந்தது.