கடந்த 10 ஆண்டுகளில் , தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் பல திறமையான இயக்கு நர்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் நாளைய இயக்கு நர் 2 வது பதிப்பில் வெற்றிபெற்ற சுதர், திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தின் மூலம் இயக்கு நராக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் கயல் சந்திரமெளலி, சாட்னா டைட்டஸ், பார்த்திபன், சாம்ஸ், டேனி, அர்ஜெய் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படம் இந்த வாரம் செப்டம்பர் 27 ல் வெளியாகிறது. தனது இளவலுக்காக '2 Movie Buff ' நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரித்திருக்கும் இந்தப்படத்தை தொரட்டி என்கிற வெற்றிப்படத்தை வெளியிட்ட எஸ் டி சி நிறுவனம் வெளியிடுகிறது.
”கயல் படம் எனக்கு நடிகனாக எப்படி ஒரு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்ததோ அதைப்போல், சிறந்த தயாரிப்பாளர் என்கிற அடையாளத்தை இந்தப்படம் எனது அண்ணனுக்குக் கொடுக்கும்..” என்றார் கயல் சந்திரமெளலி.
“திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. இதனை மிகவும் சுவராஸ்யமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் சொல்லியிருக்கிறோம்..” என்கிற இயக்குநர் சுதர், பலம் பொருந்திய ஊடகமான சினிமா மூலம் எதைச் சொல்லவேண்டுமோ அதை மட்டுமே சொல்லி பொறுப்பான படைப்பாளியாகப் பணியாற்றியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
நிரஞ்சன் பாரதி, முரளிதரன் கே என், சுதர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு அஷ்வத் இசையமைக்க, மார்டின் ஜோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரெமியன் கலை இயக்கு நராகவும் , வெங்கட்ரமணன் எடிட்டராகவும் பணியாற்றியுள்ள இந்தப்படத்தில் பில்லா ஜெகன் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.