கார்த்திகை மாதம் என்றால் அது சுவாமி ஐயப்பனின் வழிபாடுகள் இன்றி எப்படி இருக்க முடியும். இருமுடியினை தலையில் எடுத்துச் செல்வதன் ரகசியம் என்ன..? சபரிமலைக்கு இரண்டு மாலை அணிந்து செல்வது ஏன்..? தேங்காயில் நெய் எடுத்துச் செல்லும் ரகசியம்..? நெய்யபிஷேகம் எதற்கு..? சபரிமலை செல்ல மாலைபோடும் முன் திருமணமானவர்கள்/திருமணமாகாதவர்கள் யாரிடம் அனுமதி பெற்றுப் போட வேண்டும்..? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு ஐயப்பனின் திருவிளையாடல்களுடன் பதில் சொல்ல வருகிறது கருணைக் கடலே ஐயப்பா திரைப்படம்.
திரைப்படங்களிலும் அதை விட அதிகமாகத் தொலக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் நடித்து பெரும்பாலான ரசிகர்களைச் சம்பாதித்து இருக்கும் நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் கருணைக்கடலே ஐயப்பா. பிறைசூடன், காமகோடியன் போன்ற முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய முத்தான 6 பாடல்களுக்கு அற்புதமான இசையமைத்திருக்கிறார் பழம்பெரும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். அவர் இசையமைத்த பாடல்களை எஸ்.பாலசுப்ரமணியம், மனோ, திப்பு, இசையமைப்பாளர் தேவா ஆகியோருடன் ஜீவா வர்ஷினி என்கிற பாடகியும் பாடியிருக்கிறார். கருணைக் கடலே ஐயப்பா வின் பாடல்களை நடிகர் செந்தில் வெளியிட அதன் தயாரிப்பாளரும் படத்தில் வில்லனாக நடித்திருப்பவருமான கிரீஷ் பெற்றுக் கொண்டார். விழாவில் மக்கள் தொடர்பு யூனியன் தலைவர் விஜயமுரளி, இயக்குனர் ஆதவன், மனித உரிமை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்மண்டபம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பிலிம்ஸ் சார்பாக கிரீஸ் தயாரித்திருக்கும் கருணைக் கடலே ஐயப்பா படத்தில் அறிமுக நாயகன், நாயகியோடு ஸ்ரீகாந்த், செந்தில், டெல்லிகணேஷ், சண்முகசுந்தரம், ஆதவன், சாகீர், நளினி, கிரேன் மனோகர், அனுஸ்ரீ, மாஸ்டர் சச்சின் என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தொடர்மழைகாரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருணைக் கடலே ஐயப்பா வின் இறுதிக்கட்ட படப்படிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் தொடர்ந்து நடைபெற்று ஜனவரிக்குள் படம் வெளிவர இருக்கிறது. சுவாமி ஐயப்பனைப் பற்றிய திரைப்படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக மாறியிருக்கும் சுருளி மனோகரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கருணைக் கடலே ஐயப்பா ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் ஐயப்பனின் அருளைப் பெற்றுத் தரும் என்றால் அது மிகையாகாது.