அறிமுக இயக்குநர் பிரவீன் குமார் இயக்கிய காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டங்களை இயக்குநர் பேரரசு, சண்டைப்பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் நடிகர் ஆரி கலந்துகொண்டு வெளியிட்டனர்.
விழாவில் பேசிய பேரரசு, “காதலும் நகைச்சுவையும் என்பது வெற்றிபெறக்கூடிய திரைக்கதை. எனது படங்களில் முதல்பாதி, காதலும் நகைச்சுவையும் தான், இரண்டாம் பாதியில் தான் ஆக்ஷன் டேக் ஆஃப் ஆகும்…
ஜெயிச்சாலும் மது விருந்து தோற்றாலும் மதுவிருந்து என்கிற கலாச்சாரம் மாறவேண்டும். அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம். எனது படங்களில் நாயகன் மதுக்குடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது. கெட்டவனான வில்லன் கூட ஒன்றிரண்டு காட்சிகளில் தான் மதுக்குடிப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். இனிமேலாவது அது போன்ற காட்சிகளைத் தவிர்க்கவேண்டும், பிரவீன்குமார்.
ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றியிருக்கிறார். தமிழில் இதுதான் முதல் படம். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள், பிறமொழிகளில் வெற்றிப்பெற்றால் வியாபார வெற்றி தான். தாய்மொழியில் வெற்றியடைவது தான் ஆத்ம திருப்தி தரும்” என்றார்.
கதாநாயகன் ஸ்ரீனிவாசன் பேசும்போது, “நானும் பிரவீனும் ஒரே கம்பெனியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தோம். அப்போது உங்களை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிரவீனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாத்தனம் கலந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதற்கு முன்பு இதென்ன இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துக் கொண்டிருப்பேன், ஆனால் இப்படத்தில் நடித்தபோது தான் ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று தெரிந்து கொண்டேன்..” என்றார்.அத்துடன் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஜூனியர் பாலையா தான், நான் உதவி இயக்குநராகப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட முதல் நாளில் சந்தித்த நடிகர் குறிப்பிட்டு அன்றும் இன்றும் என்கிற தலைப்பில் பதிவிடுவதற்காக அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இப்படத்தின் சிறப்பு விருந்தினர்களாக 'ஜூனியர்' பாலையா, மக்கள் தொடர்பாளர்கள் பெருத்துளசி பழனிவேல், விஜய முரளி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கும் காதல் அம்பு, இயக்கு நரின் சொந்த காதல் அனுபவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் நாகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய MDPC நிறுவனம் சார்பாக டாக்டர் எம் டி சுரேஷ் பாபு தயாரித்திருக்கும் காதல் அம்புவிற்கு இசையமைத்திருக்கிறார் சன்னி டான்.