சோல்ஜர்ஸ் பேக்டரி தயாரிக்க கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மிகவும் குறுகிய காலத்தில் தயாராக இருக்கும் இந்தப்படத்தில் யோகிபாபு, அஞ்சலி மற்றும் விஜய் டி.வி. ராமர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்தப்படம் குறித்து தயாரிப்பாளர் சினிஷ் கூறியபோது, “விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தக் கதையை மிகவும் ரசித்தேன், எனது மகிழ்ச்சி படம் வெளியாகும் போது ரசிகர்களிடமும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் அளவிற்கு, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் எவ்வளவு மாறுபட்டது என்பதை படம் பார்க்கும்போது உணரலாம்.
யோகி பாபு மற்றும் விஜய் டி.வி. ராமர் ஆகியோர் பிரபலமானவர்கள் என்பதற்காகவோ பெரிதாக அறுவடை செய்துவிடலாம் என்பதற்காகவோ நடிக்க வைக்கவில்லை. அந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களை விட்டால் யாருமில்லை என்பதனாலேயே அவர்களை இணைத்திருக்கிறோம். அதையும் ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்கள், படம் வெளியானபின்பு..” என்றார்.
இந்தப் படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு செய்ய, அருண்ராஜா பாடல்களுக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குநராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் , திலீப் சுப்பராயன் சண்டை இயக்கு நராகவும் பணியாற்றுகிறார்கள்.