ஆர்.வி.உதயகுமார் 90 களின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் முக்கியமானவர். அன்றைய நிலையில், முதல் ஏழு நடிகர்கள் என்று சொல்லப்படும், சிவாஜி, ரஜினி, கமல், விஜய்காந்த், பிரபு, கார்த்திக், அர்ஜுன் என்று அனைவரையும் இயக்கியவர். திரைப்படக்கல்லூரி மாணவராக இருந்து திரைத்துறையில் கொடிகட்டிப்பறந்த இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
இன்றைய, விஸ்காம் மாணவர்களின் முன்னோடி என்றால் அது மிகையாகாது. சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திலிருந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமீபத்தில இவர் கலந்துகொண்ட ஒரு விழாவில், திரைப்பட வணிகம் வெளிப்படையாக அமைந்தால் தான் தயாரிப்பாளர்கள் சரியான முதலீடு செய்து லாபம் பெற்று தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க முடியும், சந்தை மதிப்பை அடிப்படையாக வைத்து தொழில் நுட்ப்கக் கலைஞர்கள் மற்றும் நடிக நடிகையருக்கான சரியான ஊதியங்களையும் நிர்ணயிக்க முடியும். அதற்கு, ஆன் லைன் டிக்கெட் online ticket மிகவும் அவசியம்.என்று குரல் கொடுத்தார். பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திட்டந்தான் எனினும் ஆர் வி உதயகுமாரின் குரல் ஒலித்த மறுவாரமே, தமிழக அரசும் அதனைத் அமல் படுத்த்தும் நோக்குடன் தீவிரமான பரிசீலனைக்கு எடுத்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், ஒரு சம்பிரதாய விருந்தினராகக் கலந்துகொள்ளாமல், தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நல்ல அனுபவ ங்களை விதைப்பவராகவும், இன்றைய தலைமுறையினருக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் வகையிலும் பேசியும் செயல்பட்டும் வருகிறார், ஆர்.வி.உதயகுமார்.
நேற்று நடந்த பியாண்ட் மது - 8 பாயிண்ட் எண்டெர்டெயின்மெண்ட் அருமை சந்திரந் தயாரிப்பில் உருவான புளூவேல் படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்துகொண்டு, படத்தின் அறிமுக இயக்குநர் டி ரங்கநாதன், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணகுமார் .வேங்கடசாமி , இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா, அறிமுக நடிகர் மாஸ்டர் கபிஷ் கண்ணா மற்றும் பூர்ணா ஆகியோருக்கு இயக்குநர்கள் சங்கம் சார்பாக பொருளாளர் பேரரசுவுடன் இணைந்து பொன்னாடை போற்றி கெளரவித்தார்.
புதுப்பழக்கமாக இருக்கிறதே என்று இது குறித்து கேட்டபோது, " சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை வெளியீடு என்பது யாராலும் கணிக்க முடியாத நிலையில், படம் வெளியாகும் வரை காத்திருந்து அதற்கான அங்கீகாரங்களைப் பெறுவது, ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கடுந்தவம் செய்வது போல அமைந்துவிடுகிறது. குறிப்பாக, முதல் பட இயக்குநர்கள், படம் வெளியாகி அதன் வெற்றி தோல்விகளைப் பொருத்தே கவனத்தில் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற விழாக்களில் அவர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரத்தையும் கெளரவத்தையும் வழங்கிவிட்டோமானால், அவர்களுக்குப் பெரிய தன்னம்பிக்கையும் உந்துதலையும் கொடுக்கும். அதனை தாய்வீட்டுச் சீதனமாக இயக்குநர்கள் சங்கம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளது.
புளூவேல் படத்தைப் பொருத்தவரை, சமூக அக்கறை கொண்ட படமாக இயக்கியிருக்கிறார், ரங்கநாதன். இசையும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கின்றன, நிச்சயம் வெற்றி பெறும்.." என்றார் ஆர்.வி.உதயகுமார்.