-K.Viijay Anandh
சமூக கருத்துக்களை வணிக சூத்திரத்தில் சொல்லும் திறமையான இயக்கு நர்களுள் ஜன நாதன் முக்கியமான இடத்தை வகிக்கிறார். தற்பொழுது விஜய்சேதுபதி – ஸ்ருதி ஹாசன் நடிக்க லாபம் படத்தையும் அதே பாணியில் இயக்கிவருகிறார். கொஞ்சம் புதுமையான தோற்றத்துடன் நடிக்க பல்வேறு நடிகைகளைப் பரிசீலனை செய்தவர்கள் இறுதியாக சாய் தன்ஷிகாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தேர்வு சரிதான் என்பதற்கிணங்க படத்தில் அவருக்கான தோற்றம் படக்குழுவினரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறதாம்.
அவரது வாய்ப்பு குறித்தும் லாபம் படம் பற்றியும் தன்ஷிகாவிடம் உரையாடியபோது…
லாபம் படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்…
ஜனநாதனின் படங்களில் சமூக சிந்தனை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும், லாபமும் அப்படிப்பட்ட படம் தான். விவசாயிகளின் வாழ்வியலைப் பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும்.
கதை கேட்டுவிட்டுத்தான் ஒத்துக்கொண்டீர்களா..?
இல்லை, கதையைப் பற்றி படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது தான் அறிந்துகொண்டேன். இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் என்றேன். சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்து தான். அப்படி இருக்கும் போது எதற்கு கதை கேட்கவேண்டும்..?
பேராண்மை தன்ஷிகாவிற்கும், லாபம் தன்ஷிகாவிற்கும் உள்ள வித்தியாசம்..?
பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன். ஆனால், பேராண்மைப் படத்தில் நான் நடித்ததிற்கும் இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள தன்னம்பிக்கை கூடி இருப்பதை உணர முடிகிறது. இப்போதெல்லாம் என்னுடைய சினிமா பார்வையை படப்பிடிப்பு தளத்தில் பகிர்ந்துகொள்ளும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்குக் காரணம் ஜனநாதன் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விசயங்களை ப் பகிர்ந்துகொள்வார். அதேபோல் நாம் சொல்லும் விசயங்களையும் கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை பரிசீலனை செய்வார்.
ஜனநாதன் இயக்கத்தில் உங்களுக்குப் பிடித்த படம்..?
அவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்துப்படங்களுமே பிடிக்கும். குறிப்பாக ஈ, இயற்கை இரண்டும் மிகவும் பிடிக்கும்.
லாபம் விஜய்சேதுபதியைப் பற்றி..?
லாபம், விஜய்சேதுபதியை மக்களுக்கு இன்னும் அதிகமாகப் பிடிக்கும். அவர் ஒவ்வொரு படங்களிலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். லாபம் படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார். எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்து வருகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர்.
உங்களது கதாபாத்திரம் எப்படிப்பட்டது..?
மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. காரணம் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை விட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர் ஜனநாதன் . அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமானதாகத் தான் இருக்கும். மேலும் இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
லாபம் பற்றி ஒரே வார்த்தையில்..?
"இப்படம் சமூகத்திற்கான லாபம்"
விஜய்சேதுபதி புரொடக்ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார், டி.இமான் இசை அமைக்கிறார்.