இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் PLAY HOUSE என்ற ஒரு திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம். இந்த பிவிஆர் திரையரங்கை நடிகர் பிரசன்னா, நடிகை சிநேகா தம்பதியினர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரசன்னா, “பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன். மிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லாத நிலையில், பிவிஆர் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
தனித்திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது. 10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும்… “ என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சிநேகா, “ பிரசன்னாவும் நானும் சினிமா பைத்தியங்கள். வெளியாகும் படங்களை முதல் இரண்டு நாட்களுக்குள் பார்த்துவிடுவோம். வீட்டை கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு மாற்றியபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் பல கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்கிற வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக PLAY HOUSE என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்..” என்றார்.