புதுச்சேரி கம்பன் கழகத்துடன் இணைந்து புதுச்சேரி அரசு நடத்திய 54ஆவது ஆண்டு கம்பன் விழா தொகுப்பு கட்டுரை
கட்டுரையாக்கம்,
- K.விஜய் ஆனந்த்
கம்பன் விழா நிகழ்வுகளின் சாரம்சம்
புதுச்சேரி கம்பன் கழகத்துடன் இணைந்து புதுச்சேரி அரசு நடத்திய 54ஆவது ஆண்டு கம்பன் விழா, மே 10,11,12 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. புதுச்சேரி, தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பார்வையாளர்களும் பேச்சாளர்களும் கலந்து கொண்ட செந்தமிழ் பிரவாகம் எடுத்த இந்த அருமையான விழாவை, புதுச்சேரி மாநில முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்து விழாவிற்கு வந்திருந்த பேச்சாளர் மற்றும் பார்வையாளர்களை வரவேற்று மகிழ்ந்தார். தொடக்க நிகழ்வுக்கு நீதியரசர் வி.இராம சுப்பிரமணியம் தலைமை தாங்க, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து 54 ஆவது ஆண்டு கம்பன் விழா மலர் வெளியிடப்பட்டது. அத்துடன், பல்வேறு நூல்களும் வெளியிடப்பட்டுத் தமிழறிஞர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. கம்பன் கழகம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முதல் நிகழ்வாக, திருநாவுக்கரசு இராஜேஸ்வரி அறக்கட்டளையின் நிறுவனர் சி.பி.திரு நாவுக்கரசு முன்னிலையில் ”தாய் தன்னை அறியாத கன்றில்லை..” என்கிற தலைப்பில் புலவர் கோ.சாரங்கபாணி, எழிலுரை ஆற்றினார்.
தொடர்ந்து பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு, அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில், நீதியரசர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியப் பெருந்தகைகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களும் கம்பராமாயணத்தில் இல்லறம், சொல்லறம், வில்லறம் ஆகிய தலைப்புகளில் செந்தமிழ்த்தேன் மழைபொழிந்தனர்.
போர் முனையில் கும்பனை அழைத்த வீடணனின் செயல்கள் முறையற்றது என்று வழகுரைஞர் க.சுமதி வழக்குத் தொடுக்க, அதனை மறுத்து இரா.மாது வாதாட, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நடுவராக அமைந்த வழக்காடு மன்றம், அறத்தோடு வாழுத் தேவையான பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.
சப்தகிரி வே.பொ.சிவக்கொழுந்து – வே.பொ.இராமலிங்கம் சகோதரர்கள் அறக்கட்டளை சார்பாக நடந்த காப்பிய நோக்கம் வெற்றிபெற பெரிதும் காறனம், சீதையின் துணிவா..? அனுமனின் ஆற்றலா..? வீடணனின் துணையா..? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வே.பொ.இராமலிங்கம் முன்னிலையில் நடந்த இந்த பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கினார், கண.சிற்சபேசன். மூன்று அணிகளில் இருந்து ஒரு அணியை நீக்கும் பொறுப்பு 49 நோக்கர்களுக்கு வழங்கப்பட்டு, குடவோலை முறையில் வாக்குச்செலுத்துதல் நடந்தது. அன்றைய தினம், வீடணன் அணி நோக்கர்களால் விலக்கப்பட்டு, சீதையின் துணிவே என்கிற தீர்ப்பை நடுவர் கண.சிற்சபேசன் வழங்கினாலும், இல்லை இல்லை இந்தத் தீர்ப்பில் உடன்பாடில்லை என்று மேல் முறையீடும் செய்யப்பட்டது.
மூன்றாம் நாளில் நிறைவுப்பகுதியாக அமைந்த நிகழ்வில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சான்றோர்களுக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. வேல் சொக்க நாதன் அறக்கட்டளை நிறுவனர் வேல்.சொ.இசைக்கலைவன் முன்னிலையில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், நீதியரசர் வி.இராம சுப்ரமணியன், முனைவர் தெ.ஞானசுந்தரம் மற்றும் அ.அன்பரசு இ.ஆ.ப நீதிபதிகளாக இருந்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைகள், முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் அனுமன் ஆற்றலே என்கிற தீர்ப்பினை, நோக்கர்களின் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார் நீதியரசர் வி.இராம சுப்ரமணியன்.
நிறைவு நாளின் முற்பகலில் முதல் நிகழ்வாக அமைந்த சிந்தனை அரங்கில் ”கம்பனில் சிலம்பு” பொதுத்தலைப்பாகக் கொடுக்கப்பட்டது. உட்கருத்தாக அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் என்கிற தலைப்பில் பேராசிரியர் தி.இராஜகோபாலன், உரைசார் பத்தினிக்கு உரைந்தோர் ஏத்தலும் என்கிற தலைப்பில் பேராசிரியர் அப்துல் காதர் மற்றும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுதும் என்கிற தலைப்பில் பேராசிரியர் மு.இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்தியா முழுவதும் வடமுனையில் இருந்து தென்பகுதி வரை பயணித்த கம்பராமாயணத்து நாயகன் இராமன் இந்தியாவை ஒருங்கிணைக்கிறார் என்றால், சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் தன் கணவனை இழந்த கண்ணகிக்கு சேர மன்னன் ஆலயம் அமைத்த விதத்தில் கண்ணகி மூவேந்தர்களின் நாடுகளுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கிறார், அன்று மலையாளம் இருந்திருக்க முடியாது, மூவேந்தர்களும் தமிழரசர்களே! இந்தச் சிறப்பான சிந்தனை அரங்கத்திற்குப் பாவலர் மணி சித்தன் அறக்கட்டளை நிறுவனர் இரா.இராமானுஜம் முன்னிலை வகிக்க, முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை தாங்கினார்.
இரண்டாவது நிகழ்வில் பாராட்டரங்கம் அமைக்கப்பட்டு, இசைக்குயில் பத்ம பூஷன் பி.சுசீலா வுக்கு 54 ஆவது ஆண்டு கம்பன் விழா சார்பாக பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி முதல்வரும் கம்பன் கழகப்புரவலருமான வே. நாராயணசாமி, பாராட்டுரை வழங்கியதுடன் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பித்தார். இந்த நிகழ்விற்கு, புதுச்சேரி துணை சபாநாயகர் வே.பொ.சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார்.
பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய பி.சுசீலா, “தெலுங்கு மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த என்னைக் கம்பர் தான் இங்கே அழைத்து வந்திருக்கிறார். எனக்கும் கம்பராமாயணத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லாவிட்டாலும், இளைய கம்பன் என்று சொல்லத்தக்க கண்ணதாசன் எழுதிய ராமன் எத்தனை ராமனடிப் பாடலைப் பாடிய பெருமை எனக்கு இருக்கின்றது..” என்றார். அத்துடன் அந்தப்பாடலையும் பாடி, அரங்கில் கூடியிருந்த அனைவரையும் மகிழ்ச்சி கலந்த பக்தி பரவசத்திற்கு ஆட்படுத்தினார். இராமனைப் பாடிய பி.சுசீலா விற்கு இராமேஸ்வரம் கம்பன் கழகம் சார்பாக, அதன ஒருங்கிணைப்பாளர் கோடூர் இரமணி சாஸ்திரிகள் ஏற்பாட்டில் இராமேஸ்வரத்தில் இருந்து தருவிக்கப்பட்ட கோடி தீர்த்தம் மற்றும் இராமநாதசுவாமி கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்தளவிற்கு கம்பராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர்களாக இருக்கும் சான்றோர் பெருமக்களனைவரும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களாகவே இருக்கின்றார்களே! இளையவர்களுக்கு இந்த வரம் கிடைத்தால், இன்னும் சிறப்பாகக் கம்பனின் காவியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இயலுமே என்று ஆதங்கப்படக்கூட அனுமதிக்காமல், இளையோர் அரங்கம் அமைக்கப்பட்டு, கம்ப காவியத்தின் திருப்புமுனை என்கிற தலைப்பில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் பாம்பன். மு.பிரசாந்த், வி.யோகேஷ் குமார், செல்வி காவ்யா மற்றும் த.திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டு முறையே கூனியின் கோபம், கையேயியின் மனமாற்றம், சூர்ப்பநகையின் சூழ்ச்சி மற்றும் மாரீசனின் வருகை என்கிற தலைப்புகளில் தங்கள் பங்கு வாதங்களை எடுத்து வைத்தனர். பேராசிரியர் த.இராமலிங்கம் தலைமை தாங்கி, கையேயியின் மனமாற்றமே என்று தீர்ப்பு வழங்கினார்.
ஏறத்தாள 1100 வருடங்களுக்கு முன்பு நாட்டரசங்கோட்டைக் கவிஞர் கம்பனால் எழுதப்பட்ட கம்பராமாயணம், உலகம் முழுவதும் தமிழறிஞர்களால் கொண்டாடப்பட்டு, அதிலுள்ள அற்புதமான கருத்துக்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகில் கம்பராமாயணம் அளவிற்குக் கொண்டாடப்படும் காவியங்கள் வேறில்லை என்றால் அது மிகையாகாது.
கம்பராமாயணம் ஏன் வேண்டும்..?
இன்றைய செய்தித்தாள்களைத் திறந்தாலே, மனித நேயமற்ற படுகொலைகள், நிர்வாகச்சீர்கேடு, கள்ளக்காதல், பாலியல் பலாத்காரம் போன்ற செய்திகள் தாம் பெருமளவில் ஆக்ரமிக்கின்றன. முக்கியமாகப் பிரம்மாச்சார்யத்தைக் கைக்கொள்ள வேண்டிய வயதில் காம இச்சைகளால் தூண்டப்பட்டு பருவ வயதினர் கூட பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். 16 வயது ஆன இருபாலினத்தனவர்களும் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அது தவறில்லை என்கிற துரதிஷ்டவசமான முடிவுக்கு வந்திருப்பதும், உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்குக் குழந்தைகள் இருக்கும் இளம் தம்பதியர் கூட விவாகரத்திற்கு வருவதும் , அதனால் , அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதும் கூட, கம்பன் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சான்றோர்களின் பெரும் கவலையாக முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவற்றைக் அறவே களையும் ஆற்றல் கம்பராமாயணத்திற்கு இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. கம்பராமாயணத்தை மூலப்பொருளாகக் கொண்டு சான்றோர்கள் உரையாற்றிய போதும் வழக்காடுமன்றத்தில் தங்களது வாதப்பிரதிவாதங்களை முன்வைத்த போதும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்களை மேற்கோளாகக் காட்டியது போற்றத்தக்கதாய் அமைந்தது.
என்ன தவம் செய்தோம் தமிழர்களாகிய நாம், இப்பெருங்காப்பியங்களை நம் தாய்த்தமிழில் கிடைக்கப்பெற!
கம்பன் விழா உபசரிப்பு
புதுச்சேரி அரசு, புதுச்சேரி கம்பன் கழகத்துடன் இணைந்து அரசு விழாவாகக் கொண்டாடிய 54 ஆவது ஆண்டுக் கம்பன் விழாவினைப் புதுச்சேரி துணை சபாநாயகர் வே.பொ. சிவக்கொழுந்து மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் முதல்வர்கள் வைத்தியலிங்கம், ஜானகிராமன், முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்கள் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களில்லாமல் தமிழுக்காக ஒன்று சேர்ந்து விழாவினைச் சிறப்பித்தனர். திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் வெங்கடாஜலபதி, தனது அடியவர் கனவில் தோன்றி தன் கோயிலில் இறைவனுக்கு அடுத்து முக்கியத்துவம் பெறுவது பக்தர்களே. அவர்கள் இறைவனின் திருவடிகளைச் சரணாகதி அடைய வருகிறார்கள். இறைவன் தன் அருளால் ஆரத்தழுவிக் கொள்ள விரும்புகிறான், என்று வலியுறுத்தியிருப்பதாகச் செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. அதற்கிணங்க, புதுச்சேரி கம்பன் விழாவில் கம்பனை இறையாகக் கொண்டு அவனது காப்பியச் சுவையைச் சுவைக்க வருபவர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினர், சாதாரண மக்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் உபசரிக்கப்பட்டனர். அமைச்சர் பெருமக்களும், புதுச்சேரி முக்கியபிரமுகர்களும் தங்களது இல்லவிழாவாகக் கம்பன் விழாவைக் கருதியதுடன், கலந்துகொண்ட அனைவரையும் இன்முகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். முதல்வர் முதல் அனைத்து அரசுப்பிரதி நிதிகளும் ஒவ்வொரு மக்களிடமும் சென்று அவர்களது தேவையைக் கேட்டறிந்து உணவு பரிமாறியது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
அடுத்த ஆண்டு கம்பன் விழா
கம்பன் விழாவில் அரைத்த மாவே அரைக்கப்படுகிறது என்று புரியாமல் உளறுபவர்களுக்கு, "ஒவ்வொரு விழாவிலும் நாங்கள் அரைத்துக் கொண்டிருப்பது கை மண் அளவே, கம்பன் உரைத்துச் சென்றதோ கடல் அளவு. முழுவதுமாக அரைத்து முடிக்க பல நூறு வருடங்கள் வேண்டும்.." என்று நயம்பட பதிலடி கொடுக்கப்பட்டது.
நம் இந்திய மக்கள் மட்டுமல்ல, இந்த உலகமக்கள் பயனுற, நல் வாழ்க்கையில் ஈடுபட கம்பராமாயணம் அவசியத்தேவை. அதனைப் படிக்க முடியாதவர்கள், இது போன்ற கம்பன் விழாக்களில் அவசியம் கலந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம், குறிப்பாக குடும்பம் குடும்பமாக.
புதுச்சேரி கம்பன் கழகமும் அரசும் இணைந்து கொண்டாடும் கம்பன் விழாவின் 55 ஆம் ஆண்டு நிகழ்வுகள் வரும் 2020 மே 8, 9, 10 முறையே வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறவுள்ளது. உலகத்தமிழர்கள் தங்களது நாளேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொள்வோம்.
மேலதிக விபரங்களுக்கு, இரா ரவி என்கிற குணவதி மைந்தன் - செய்தி தொடர்பாளர் 9443260242 - புதுச்சேரி கம்பன் கழகம்