-K Vijay Anandh
எஸ்.ஜே.சூர்யா , பிரியா பவானி சங்கர் நடிக்கும் மான்ஸ்டர் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. யுகபாரதி, கார்த்திக் நேத்தா மற்றும் இணை வசனகர்த்தா சங்கர்தாஸ் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகர்.
மாயா, மாநகரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சர்பாக எஸ்.ஆர் பிரபு & சகோதாரர்கள் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் ஒரு நாள் கூத்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இந்தப்படத்திற்கு, மூன்று நாள் கூத்து என்று கூட பெயர் வைத்திருக்கலாம். ஆம், நெல்சன் வெங்கடேசன் வீட்டில் ஒரு எலி ஒன்று புகுந்து மூன்று நாட்கள் அவரைத் தூங்கவிடாமல் செய்த, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மான்ஸ்டர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
மான்ஸ்டர் பற்றி நெல்சன் வெங்கடேசன் கூறும்போது, “ நாம் பூமிக்கு மேல் வாழ்கிறோம். அவர்கள் (எலி) பூமிக்குக் கீழே வாழ்கிறார்கள், அதுவும் மனிதர்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில். அவர்கள் நினைத்தால், ஒட்டுமொத்த மனித இனத்தை ஒரே நாளில் அழித்து விடமுடியும். சில அடி தூரம் நடப்பதற்குள் பல எலிகள் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும்.
வட இந்தியாவில் எலிக்கு ஒரு கோயிலே கட்டி வழிபடுகிறார்கள். அவர்களை முன்னோர்களின் ஆத்மாக்களாக நினைக்கின்றார்கள்.
அவர்களை வைத்து ஒரு படம் இயக்கலாமே என்று யோசித்தேன். தவிர, இந்தப்படத்தில் எலியுடன் மாட்டிக்கொண்டு எஸ் ஜே சூர்யா அல்லல்படும் காட்சிகள், என் வாழ்க்கையில் நிஜமாக நடந்தவையே. தம்மாத்தூண்டு எலி, ஒரு மூன்று நாள் என்னை ”வைச்சு செஞ்சது”..
குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய படமாக மான்ஸ்டர் இருக்கும்..” என்றார்.
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசும்போது, “ வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ஜீவகாருண்யம் பேசும் வள்ளலார் போன்ற ஒரு கதாபாத்திரம். எந்த உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காத நாயகன், ஒரு எலி அவனைப் பாடாய்ப்படுத்துகிறது. அந்த எலியைக் கொன்றாரா..? அல்லது விரட்டிவிடுகிறாரா..? அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதே கதை என்று இயக்குநர் சொன்னபோதே மிகவும் பிடித்துப்போய்விட்டது..” என்றார். அத்துடன், சிறுவயதில் தீபாவளிக்கு வாங்கி பரண் மேல் வைத்திருந்த ஜீன்ஸ் பேண்டை எலி துவம்சம் செய்ததை நினைவுகூர்ந்த அவர், “ எலியுடனான உறவு விட்ட குறை தொட்ட குறையாக, அதை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கும் அளவிற்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது..” என்றார்.
மன்ஸ்டர் படத்தில் வரும் எலி, கிராபிக்ஸ் எலி அல்ல. உண்மையான எலியை வைத்து அதனுடன் அக்ரிமெண்ட் போடாமலே 20 நாட்கள் படம்பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சவாலான இந்தக்காட்சிகளுடன் மான்ஸ்டர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோகுல் விநாயக்.
முன்னதாகப் பேசிய, படத்தின் இணை வசனகர்த்தாவும் இயக்குநரின் ஆசிரியருமான சங்கர் தாஸ், “ இந்தியாவிலேயே கதா நாயகியைப் பூவைப்போல் பார்த்துக் கொள்கிற இயக்கு நர்களில் முதன்மையானவர் நெல்சன் வெங்கடேசன். ஆனால், எஸ் ஜே சூர்யா அதற்கு நேரெதிர். இருவரையும் ஒரே செட்டில் வைத்துக் கொண்டு பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது..” என்று பேசி எஸ் ஜே சூர்யா , பிரியா பவானி சங்கர் ஆகியோரை மட்டுமல்ல , அரங்கில் கூடியிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார்.