சிவகார்த்திகேயனின் 16 வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தினை இயக்குகிறார் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், கேடிபில்லா கில்லாடி ரங்காவில் வணிக ரீதியில் வெற்றிகரமான நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, மூன்றாவது முறையாக இந்தக்கூட்டணி இணைந்திருக்கிறது. அதே நேரம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதலாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் துப்பறிவாளனில் அறிமுகமான அனு இம்மானுவேல் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுடன் நான்காவது முறையாகக் கைகோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் டி இமான். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, வீர சமர் கலை இயக்கத்தைக் கவனிக்க, ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங் செய்கிறார்.
இவர்களுடன் பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ், சூரி , யோகி பாபு, வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.